மலேசிய சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அருகில் ஜோகூர் கடற்பாலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
செப்டம்பர் 18ஆம் தேதி மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டி அவரை மோதியதாகக் கூறப்படுகிறது.
அந்த விபத்து பிற்பகல் 1.40 மணிவாக்கில் நடந்ததை மலேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார்.
அந்த 52 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஜோகூர் பாருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
அவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதியதாகச் சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
அவரின் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு மோட்டார்சைக்கிளோட்டியால் தக்க நேரத்தில் நிறுத்தமுடியாததால், அந்த மோட்டார்சைக்கிளோட்டி அவரை மோதியதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்ததாக ஜோகூர் பாரு (தெற்கு) காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் ராவுப் செலாமாட் கூறியதாக, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.