ஒரே சடலத்தை இரு குடும்பங்கள் உரிமை கோரியதால் அடையாளம் காண உதவிய சிங்கப்பூர் அதிகாரிகள்

ஒரே சடலத்தை இரு குடும்பங்கள் உரிமை கோரியதால் அடையாளம் காண உதவிய சிங்கப்பூர் அதிகாரிகள்

படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

26 Sep 2026 - 10:00 pm

2 mins read

நேப்பாளத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த பேரிடரில் உயிரிழந்த ஒருவரின் உடலைப் பெறுவதற்காக இரண்டு குடும்பங்கள் உரிமை கோரியதால் சிங்கப்பூர் அதிகாரிகள் அந்தச் சிக்கலைத் தீர்த்துவைத்துள்ளனர்.

உடை, உடல் அமைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் இரு குடும்பங்களுமே அந்தச் சடலம் தங்களது நெருங்கிய உறவினருடையது என்று தெரிவித்தன.

அப்போது சிங்கப்பூரின் கைரேகை நிபுணரான யோங் ஹெங் வெய் உதவிக்கு அழைக்கப்பட்டார்.

திரு யோங்கும் அவரது குழுவினரும் நடத்திய கைரேகை ஒப்பீட்டுச் சோதனையில், அந்தச் சடலம் இரண்டு குடும்பங்களுக்கும் உரியது அல்ல என்பது பின்னர் தெரியவந்தது.

உள்துறைக் குழுவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பைச் சேர்ந்த (எச்டிஎக்ஸ்) திரு யோங், நேப்பாள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு நிவாரணப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட சிங்கப்பூரர்களில் ஒருவர். செப்டம்பர் 1 முதல் 18 வரை 35 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூரின் ‘ஆப்பரேஷன் வேன்கார்ட்’ குழு நேப்பாளத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.

இந்தக் குழுவில் காவல்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், எச்டிஎக்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஆற்றிய சேவைகளும் இதில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களின் சேவைகளும் சனிக்கிழமை (செப்டம்பர் 26) ஹோம்டீம்என்எஸ் பிடோக் ரிசர்வோர் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்டன.

சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

திபெத்தையும் நேப்பாளத்தின் சில பகுதிகளையும் தாக்கிய வெள்ளப்பெருக்கு 1,450க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது. ஒன்பது சிங்கப்பூரர்கள் உட்பட 5,700க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணவில்லை.

சிங்கப்பூர் குழுவினர் பிரேதப் பரிசோதனை, கைரேகைப் பதிவு, அடையாளப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

நேப்பாள காவல்துறை, ஆயுதப் படை அதிகாரிகளுக்கு ஆளில்லா வானூர்திகளை இயக்கவும் அவர்கள் பயிற்சி அளித்தனர்.

நேப்பாளத்தில் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கைரேகை நிபுணரான திரு யோங், “இறந்தவரின் கைரேகைகளை இரு குடும்பத்தினரும் கொண்டு வந்த ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தச் சடலம் இரு குடும்பத்திற்கும் உரியதாக இல்லை,” என்றார்.

சடலங்களிலிருந்து பெறப்படும் கைரேகைகள் கடப்பிதழ், காணாமல் போனோர் பற்றிய பதிவுகளுடன் ஒப்பிடப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்