அனைத்துலகச் சட்டத் தூதரான ரீனா லீ, நெதர்லாந்தின் த ஹேக் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலக நீதிமன்றத்தின் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் உலக நீதிமன்ற அமர்வில் இணையும் முதல் சிங்கப்பூரர் மற்றும் தென்கிழக்காசியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
57 வயது ரீனா லீ, செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) நடைபெற்ற முதல் சுற்று வாக்களிப்பிலேயே, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை மற்றும் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச் சபையில் பதிவான 191 வாக்குகளில் 151 வாக்குகளையும் பாதுகாப்பு மன்றத்தில் 15 வாக்குகளில் 13 வாக்குகளையும் பெற்று அவர் அமோக வெற்றி பெற்றார்.
தனது வெற்றியைத் தொடர்ந்து, தமது வேட்புமனுவை ஆதரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து திருவாட்டி லீ பேசினார்.
“அனைத்துலகச் சமூகம் என்மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் நன்மதிப்பையும் கண்டு நான் அளவிலாப் பெருமையும் கௌரவமும் அடைகிறேன்.
“உலகளவில் நிச்சயமற்ற சூழல் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், விவகாரங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதிலும் அனைத்துலகச் சட்டத்தை நிலைநிறுத்துவதிலும் அனைத்துலக நீதிமன்றம் தலையாய பங்கை ஆற்றுகிறது.
“சுதந்திரமாகவும் நடுநிலையோடும் நேர்மையோடும் நீதிமன்றத்தில் பணியாற்றவும் வரும் ஆண்டுகளில் அதன் முக்கியப் பணிகளுக்கு ஆக்ககரமான பங்களிப்பை வழங்கவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்று திருவாட்டி லீ தெரிவித்தார்.
இத்தேர்தல் வெற்றியின் மூலம், திருவாட்டி லீ அனைத்துலக நீதிமன்றத்தில் 2027ஆம் ஆண்டு முதல் 2036ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகளுக்கு நீதிபதியாகப் பதவி வகிப்பார்.
திருவாட்டி லீயின் வேட்புமனுவுக்கு ஆதரவளிக்கும் வகையில் சட்ட அமைச்சர் எட்வின் டோங்குடன் நியூயார்க் சென்றிருந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்த வெற்றி அனைத்துலகச் சட்டத்துறையில் திருவாட்டி லீயின் தலைசிறந்த ஆற்றல், விரிவான அனுபவம், உயர்ந்த நன்மதிப்புக்கு உலகச் சமூகம் அளித்த அங்கீகாரத்தை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
