பெர்த்தில் கடந்த மே மாதம் சைக்கிளோட்டி மீது வேண்டுமென்றே தனது காரால் மோதி கொன்றதாகக் கூறப்படும் சிங்கப்பூரர் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் கேனிங் வேலில் உயர்பட்ச பாதுகாப்பு உள்ள ஹக்கியா சிறைச் சாலையில் 27 வயது இங் ஜிங் காய் இருக்கிறார்.
டிசம்பர் 11ஆம் தேதி, அங்கு இருந்தபடியே காணொளி வழியாக ஸ்டிர்லிங் கார்டன்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு அவர் முன்னிலையாகினார்.
விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவோ மறுக்கவோ இல்லை என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இங், பிணை கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. 48 வயதுடைய நபரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் 2025 பிப்ரவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மே 24ஆம் தேதி நடந்த சம்பவத்தில் காரை ஓட்டிக்கொண்டு சென்ற இங், சொத்துப் பிரச்சினை தொடர்பாக சைக்கிளோட்டி ஒருவரை எதிர்கொண்டார்.
அப்போது இங்கின் குடும்ப மற்றும் நண்பர்கள் காரில் இருந்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, இங், சைக்கிளோட்டி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சைக்கிளோட்டி 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். படுகாயம் அடைந்த சைக்கிளோட்டி ராயல் பெர்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு அவர் உயிரிழந்தார்.
அதே நாளில் காவல்துறை விசாரணை நடத்தி இங் மீது கொலைக் குற்றம் சுமத்தியது.
அடுத்த நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சொத்துப் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா காவல் படையின் துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கோர்டோன் தெரிவித்தார்.
“அது தனிப்பட்ட சொத்துப் பிரச்சினையாக இருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இண்டிகோ எடியுகேஷன் குருப்பில் இங் கணித ஆசிரியராகப் பணியாற்றினார் என்று சொல்லப்பட்டது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய சட்டப்படி கொலைக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

