மத்திய கிழக்கு வட்டாரத்தில் கல்வி பயிலும் 40க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்களிடம் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான ஃபைஷால் இப்ராஹிம் சனிக்கிழமை (ஜூன் 21) பேசினார்.
“மத்திய கிழக்கில் மோசமடைந்துவரும் நிலைமை குறித்து நான் கவலை கொண்டுள்ளேன். குறிப்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்களை எண்ணி கவலைகொள்கிறேன். எகிப்து, சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள கல்விக் கழகங்களில் இஸ்லாமிய உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களில் அடங்குவர்,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) பதிவிட்டார். எகிப்தில் உள்ள சிங்கப்பூர் மாணவர் நலன் அமைப்பு (பெர்க்கெமாஸ்), ஜோர்தானில் உள்ள சிங்கப்பூர் மாணவர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் டாக்டர் ஃபைஷால் ஸூம் தளத்தின்வழி பேசினார் என்று மதர்ஷிப் ஊடகம் தெரிவித்தது.
“இந்த உரையாடல் முக்கியமானது. நமது மாணவர்களை நலன் விசாரிக்கவும் அவர்கள் சொல்ல விரும்புவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு அவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும்தான் நாம் ஆக அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம் என்று உத்தரவாதம் தரவும் உரையாடல் நல்ல வாய்ப்பாக அமைந்தது,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷால். மத்திய கிழக்கில் நிலவரத்தை அரசாங்கம் தொடர்ந்து கவனித்துவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களுடன் நன்கு தொடர்பில் இருக்க சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமும் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
“நிலையற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது மாணவர் தலைவர்கள் சக மாணவர்களைத் தொடர்புகொள்ள முயற்சி எடுத்து ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதைக் கண்டு நான் மனநிறைவடைகிறேன். இதன் மூலம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் தங்களுக்கு ஆதரவு இருப்பதையும் ஒவ்வொரு மாணவரும் உணர்வதோடு அவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும்,” என்றும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் விவரித்தார்.