பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதைத் தாண்டி அயலகத் தமிழர் தின விழாவில் கல்வி, தொழில்நுட்பம், வர்த்தகம் என நவீனக் கூறுகள் தொடர்பான கலந்துரையாடல்கள், கண்காட்சி உள்ளிட்டவை அமைந்திருந்தது சிறப்பான ஓர் அனுபவத்தை அளித்ததாக சிங்கப்பூரிலிருந்து சென்ற பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
உலகெங்கிலும் பரவி வாழும் தமிழரை ஒன்றிணைக்கும் அயலகத் தமிழர் தின விழாவில் கல்வி, தொழில்நுட்பம் எனப் பல்வேறு கூறுகளைக் குறித்து கலந்துரையாடல்களும் கண்காட்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல தொழில்நுட்பத் துறைகளில் தமிழைப் புகுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்த கண்காட்சியில் பங்கேற்றார் புத்தாக்க இந்தியக் கலையகத்தின் நிறுவனர் குணசேகரன்.
செயற்கை நுண்ணறிவின் துணையுடன் தமிழில் கட்டளைகளை ஏற்றுச் செயல்படும் ‘பறக்கும் பாவை’யைக் (ஆளில்லா வானூர்தி) காட்சிப்படுத்தி, அது குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கிய திரு குணசேகரன், தமிழ் மொழியை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் மின்சார வாகனங்கள் குறித்த அமர்விலும் உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முயற்சிகள், வாய்ப்புகள் குறித்து அறியவும் பல நாடுகளில் மொழியிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் கொண்டோரைச் சந்திக்கவும் இந்த விழா தளம் அமைத்ததாகச் சொன்னார் குணசேகரன்.
இதன்மூலம் இளையர்களுக்கான அறிவுப் பறிமாற்ற முன்னெடுப்புகள், புத்தாக்கத் திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பல சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இதில் பங்கேற்று மொழியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அவர்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி எனத் தமிழ்மொழியின் பல்லூடகங்களில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்துகொள்ள தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவுத் தலைவர் து.அழகிய பாண்டியன் அழைக்கப்பட்டார்.
‘தாயகம் கடந்த தமிழ் ஊடகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றிய அவர், “எனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்தேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பிற நிபுணர்கள் பங்கேற்றுப் பேசினர். மாறுபட்ட அனுபவங்களைப் பேசிய அமர்வு சிறப்பாக அமைந்தது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
‘என்ஆர்ஐ’ எனப்படும் ‘வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் என்பதுதான் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழக்கு. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் எனும் வழக்கைக்கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது. சிங்கப்பூரர்களாக இருக்கும் நாம், தமிழர்களாக அறியப்படுவது நல்ல உணர்வு,” என்றார் அவர்.
“புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேசிக்கொள்ளவும் களமாக அமைந்தது அவ்விழா. வரவேற்பும் அதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமென்ற அர்ப்பணிப்பும் இருந்தன. இது தொடர்ந்து நடைபெற்றால் புதிய மேம்பாடுகள் ஏற்படலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதுடன் உலகெங்கிலும் பரவி வாழும் தமிழரை ஒன்றிணைக்கும் அரங்கமாகவும் திகழும் அயலகத் தமிழர் தின விழாவில் ‘கணியன் பூங்குன்றன்’ விருது பெற்றார் இந்திய மரபுடைமை நிலையத் தலைவரும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான ரா.ராஜாராம்.
“அயலகத் தமிழர் எனும் வழக்கு அண்மையில் பிரபலமடைந்துள்ளது. இது பரவி வாழும் தமிழர்களுக்குப் பண்பாட்டு உணர்வுடன் பல்வேறு நன்மைகளையும் வழங்கும் சாத்தியக் கூறுகளைக் கொண்டது. தொடர்புகள் மேம்பட்டால் வாய்ப்புகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். இது சிறந்த முன்னெடுப்பு,” என்றார் அவர்.
“தமிழ் நாட்டில் புதியதாக அயலகத் தமிழர் நலத்துறை உருவாகியுள்ளது. இது மொழிக்கான ஒன்றிணைக்கும் தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாட்டிலும் மொழி சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டது. அவற்றைத் தெரிந்துகொண்டது சிறப்பான ஓர் அனுபவம்,” என்று சொன்னார் இவ்விழாவில் பங்கேற்ற கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா.
“வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து தமிழ்ப் பண்பாட்டைவிட்டு நெடுந்தூரம் சென்ற பலரை அழைத்து தமிழ்ப் பண்பாடு குறித்து அறிய உதவியது சிறப்பானது,” என்றார் விழாவில் உலகத் தமிழர்கள் தமிழ்க் கல்வி கற்க ஏதுவாக இணையவழி வாய்ப்புகள் தமிழகம் ஏற்படுத்துவது குறித்துப் பேசிய முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன்.

