$1.1 பில்லியன் இழப்பீடு வழக்கில் சிங்கப்பூர்த் தொழிலதிபரின் சொத்துகள் முடக்கம்

1 mins read
மருந்துப் பொருள் தயாரிக்கும் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் ஹுவாங் சென்ஹுவா மீது வழக்கு தொடுத்துள்ளது
c8775221-0f03-40a2-98e9-2eb80dd10d3f
திரு ஹுவாங்கின் கேபிபி பயோசயின்சஸ் நிறுவனம் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மருந்து தொடர்பில் பொய்யுரைத்ததாக நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் கூறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘கேபிபி பயோசயின்சஸ்’ நிறுவனம், உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மருந்து தொடர்பில் தவறான தகவல்களை அளித்ததால் US$830 மில்லியன் (S$1.1 பில்லியன்) இழப்பீடு தரவேண்டும் என்று டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் கோரியுள்ளது.

இதன் தொடர்பில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளது.

‘கேபிபி பயோசயின்சஸ்’ நிறுவனமும் அதைத் தோற்றுவித்த திரு ஹுவாங் சென்ஹுவாவும் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்தை உருவாக்கியிருப்பதாகக் கூறி டென்மார்க் நிறுவனத்தை நம்பவைத்ததாக இவ்வாரம் வெளியான நீதிமன்றத் தீர்ப்பு கூறியது.

‘ஆசிடியூரெனோன்’ எனும் அந்த மருந்தை 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் US$1.3 பில்லியனுக்கு ‘கேபிபி பயோசயின்சஸ்’ நிறுவனத்திடமிருந்து நோவோ நோர்டிஸ்க் வாங்கியது.

அதை நோயாளிகளிடம் சோதித்தபோது சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரியவந்ததால் US$800 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நோவோ நிறுவனம் கூறியது.

இதன் தொடர்பில் ‘கேபிபி பயோசயின்சஸ்’ நிறுவனம், அதன் தலைவர் ஹுவாங் சென்ஹுவா ஆகிய தரப்புகளின் சொத்துகளை முடக்க சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றம் இணங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

நோவோ நிறுவனம் இவ்விவகாரம் தொடர்பில் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருப்பதாக சிங்கப்பூர் நீதிமன்றம் தெரிவித்தது.

நோயாளிகளிடம் மருந்தைச் சோதித்தது குறித்த முக்கியமான தகவல்களை ‘கேபிபி பயோசயின்சஸ்’ நிறுவனம் வேண்டுமென்றே வெளியிடத் தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்