போதை கலந்த மின்சிகரெட்டுகளைத் தென்கொரியாவுக்குக் கடத்த முயன்ற சிங்கப்பூரர் கைது

3 mins read
97165c6d-fe4e-4d62-8743-30eb10767618
தென்கொரியாவுக்கு எட்டோமிடேட், கொக்கைன் கலந்த ஏறக்குறைய 20,000 மின்சிகரெட் கடத்த முயன்றதாக மூன்று சிங்கப்பூரர்களும் ஒரு மலேசியரும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: பெர்னாமா

எட்டோமிடேட், கொக்கைன் சேர்க்கப்பட்ட மின்சிகரெட்டுகளை தென் கொரியாவுக்கு அனுப்ப முயன்ற சிங்கப்பூரர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) பொறியியல் மாணவரான 31 வயது இவான் டான் ஷி சுவான், போதைப்பொருள் சேர்க்கப்பட்ட மின்சிகரெட் விநியோகக் கட்டமைப்பைச் சோலில் அமைக்க மாணவர்களைச் சேர்க்க முயன்ற குற்றவியல் குழுவின் தலைவராக இருந்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

அக்கும்பலின் செயல்பாட்டை முதலில் தென் கொரியாவின் தேசியப் புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) கண்டறிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

டானும் அவரது மூன்று கூட்டாளிகளும் ஒவ்வொரு மாதமும் எட்டோமிடேட், கொக்கைன் கலந்த 20,000 மின்சிகரெட்டுகளை கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இது இரண்டு மில்லியன் பேருக்குப் போதுமானதாகும்.

ஜூன் 19ஆம் தேதி டானுடன் சிங்கப்பூரர்களாக டிரிஸ்டன் சியூ ஜின் ஜோங், 25, குவெக் கியன் செங், 45, மலேசியரான கொங் சியென் மீ, 57 ஆகியோர் சிலாங்கூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர். அங்குதான் அவர்கள் மின்சிகரெட்டுகளைப் பொட்டலமிட்டனர்.

என்ஐஎஸ் அளித்த தகவலைத் தொடர்ந்து மலேசிய சட்ட அமலாக்கத் துறை செயல்பட்டது.

கைதுசெய்யப்பட்ட வான் டான் ஷி சுவான், 31, டிஸ்டான் சியூ ஜின் ஜோங், 25, குவெக் கியன் செங், 45, கொங் சியென் மீ, 57
கைதுசெய்யப்பட்ட வான் டான் ஷி சுவான், 31, டிஸ்டான் சியூ ஜின் ஜோங், 25, குவெக் கியன் செங், 45, கொங் சியென் மீ, 57 - படம்: தென் கொரியத் தேசியப் புலனாய்வு சேவை

மலேசியாவின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின்கீழ் 9,420 மில்லி கிராம் கொக்கைன் கடத்தியதாக கோலாலம்பூரில் ஜூன் 26ஆம் தேதி அந்த நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது பிரம்படியுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

தென்கொரியாவில் மின்சிகரெட் சட்டபூர்வமானது. எனினும், 19 வயதுக்குக் குறைந்தவருக்கு விற்கக்கூடாது என்பது உள்பட கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.

ஹாங்காங், தாய்லாந்து பிற நாடுகளில் எட்டோமிடேட் மீதான தீவிர கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் கொரியாவுக்குள் ஊடுருவுவதை அந்நாட்டு உளவுத்துறை கண்காணிக்கத் தொடங்கியது.

டான் பிரதான சந்தேகநபர் என்று அடையாளம் காணப்பட்டார். 2023ஆம் ஆண்டிலிருந்து அவர் பலமுறை தென் கொரியா சென்று வந்ததை அவரது பயணப் பதிவுகள் காட்டின.

மலேசிய அதிகாரிகள் 500,000 பேருக்குப் போதுமான மொத்தம் 4,958 செயற்கைப் போதைப்பொருள் குப்பிகளையும் கிட்டத்தட்ட 3,000 மின்சிகரெட் பெட்டிகளையும் கைப்பற்றினர்.

தென்கொரிய, மலேசிய அதிகாரிகள் போதையை அதிகரிக்க எடோமிடேட்டுடன் கொகேய்ன் சேர்க்கப்பட்ட சாத்தியம் குறித்து விசாரித்து வருவதாக என்ஐஎஸ் தெரிவித்தது.

குவெக், சியூ, கொங் மூவருக்கும் ஒரு நாளைக்கு $100 முதல் $200 வரை செலுத்தப்பட்டதாகவும் மின்சிகரெட் விற்பனையின் லாபத்தை டான் வைத்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

டான், அங் மோ கியோவில் ‘பாக் சோர் மீ’ கடையை நடத்தியபோது.
டான், அங் மோ கியோவில் ‘பாக் சோர் மீ’ கடையை நடத்தியபோது. - படம்: ஷின் மின்

அங் மோ கியோவில் ‘பாக் சோர் மீ’ கடையை நடத்துவதற்காக 2019ஆம் ஆண்டு என்டியுவில் மின்னியல், மின்னணு பொறியியல் படிப்பிலிருந்து 25 வயதில் டான் ஓராண்டு காலம் விடுப்பு எடுத்திருந்தார். அப்போது அவர் திருமணம் செய்து கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

கடை நொடித்துப் போனதும் மற்ற வியாபார முயற்சிகளில் இறங்கினார்.

இரவுநேர மனமகிழ் மன்றம் உள்பட சிங்கப்பூரில் பல உணவு, பான நிறுவனங்கள், வாகன வாடகை நிறுவனங்களிலும் இயக்குநராக டான் பட்டியலிடப்பட்டிருப்பதை வணிகப் பதிவுகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்