பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் பெண் ஒருவர் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) தெரிவித்து உள்ளது.
அந்தப் பெண் தொடர்பான தகவல்கள் நவம்பர் 19ஆம் தேதி டெலிகிராம் தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, அது பற்றி உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ வினவியது.
சிங்கப்பூர் அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கைது செய்து, அவரிடமிருந்த மின்னியல் சாதனங்களைப் பறிமுதல் செய்ததாக டெலிகிராமில் பரவிய தகவல்கள் குறிப்பிட்டன.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அதில் தகவல் பகிரப்பட்டது.
விசாரணை நடைபெறுவதால், அந்தச் சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்களை வெளியிட இயலாது என்று ஐஎஸ்டி தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் ஆதரவாளரான 17 வயது சிங்கப்பூர் ஆடவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் பள்ளி விடுமுறையின்போது தெம்பனிஸ் வட்டாரத்தில் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்ய அவர் திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது.
கத்தரிக்கோலால் எப்படிக் குத்துவது என்பதற்கான பயிற்சியை அவர் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக கடந்த 2017ஆம் ஆண்டு பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார். தீவிரவாதச் சித்தாத்தங்களில் ஈடுபட்டதற்காக அந்த 22 வயது சிங்கப்பூரர் அப்போது பிடிபட்டார்.
அதன் பின்னர், இவ்வாண்டு ஜூலை மாதம் 33 வயது சிங்கப்பூர் பெண்ணுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
முன்னாள் பொதுச் சேவை ஊழியரான அவர், சமூகச் சீர்கேட்டைத் தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிட்டு வந்ததற்காக ஏற்கெனவே அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம், இஸ்ரேலியர்களைத் தாக்குவது, கொலை செய்வது தொடர்பாக அச்சுறுத்தும் வகையிலான இணைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மீண்டும் கண்காணிப்பு வளையத்திற்குள் அவர் வைக்கப்பட்டார்.

