ஏமனுக்குச் சொந்தமான தீவில் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூர் பெண்

2 mins read
ba4c1277-820e-4085-b7ee-56b25fe90f18
சொக்கோட்ரா தீவிலிருந்து வெளியேற முடியாமல் அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் ஏறத்தாழ 750 சுற்றுப்பயணிகள் தவிப்பதாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த திருவாட்டி சென் தெரிவித்தார். - படம்: திருவாட்டி சென்

ஏமனுக்குச் சொந்தமான தீவான சொக்கோட்ராவிலிருந்து திரும்ப முடியாமல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலர் தவிக்கின்றனர். அவர்களில் சிங்கப்பூர் பெண்ணும் ஒருவர்.

ஜனவரி 2ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குத் திரும்ப திருவாட்டி சென் விமானத்தில் ஏற தயாராகிக்கொண்டிருந்தபோது விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

விமான நிலையத்துக்குள் செல்லும் பயணிகளை ராணுவ வீரர்கள் தடுத்ததாக திருவாட்டி சென் கூறினார்.

சொக்கோட்ரா அனைத்துலக விமான நிலையத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளால் ஆதரிக்கப்படும் சவுதன் டிரான்சிஷனல் கவுன்சலின் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஏமனில் உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் இடையிலான நெருக்கடிநிலை மோசமடைந்து வரும் நிலையில் உள்நாட்டுப் போரும் தீவிரமடைந்து வருகிறது.

இதனை முன்னிட்டு, ஏமனின் வான்வெளியில் பறக்க விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சொக்கோட்ரா தீவுக்குச் செல்லவும் அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்லவும் விமானங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிய வந்துள்ளதாகத் திருவாட்டி சென் கூறினார்.

சொக்கோட்ரா தீவிலிருந்து வெளியேற முடியாமல் அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் ஏறத்தாழ 750 சுற்றுப்பயணிகள் தவிப்பதாகத் திருவாட்டி சென் தெரிவித்தார்.

சொக்ரோட்ரா உட்பட ஏமனில் உள்ள மற்ற பகுதிகளுக்குச் சிங்கப்பூரர்கள் சிலர் அண்மையில் பயணம் மேற்கொண்டுள்ளதாக அபுதாபியில் உள்ள சிங்கப்பூர் தூதரகமும் துபாயில் உள்ள துணைத் தூதரகமும் தெரிவித்துள்ளன.

ஏமனில் உள்நாட்டுப் போர் நிலவுவதால் அங்கு செல்வதைத் தவிர்க்கும்படி அபுதாபியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்