ஹாண்டா கிருமித்தொற்று ஏற்பட்ட எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்த சிங்கப்பூரர்கள் இருவருக்கு இதுவரை தொற்று ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அவர்கள் விரும்பினால் வரும் சனிக்கிழமை (ஜூன் 6) வரை தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
ஆக அண்மையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையில் அவர்களுக்குத் தொற்று இன்னும் ஏற்படாதது தெரியவந்தது.
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ‘ஆண்டஸ்’ வகை ஹாண்டா கிருமிப் பரவல் ஏற்பட்டது. அந்த வகைத் தொற்று அவர்களுக்கு இதுவரை ஏற்படவில்லை என்று தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு (சிடிஏ), ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
அந்த இருவரில் ஒருவர் சிங்கப்பூரரான 67 வயது ஆடவர். மற்றொருவர் 65 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி.
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்
இருவரும் சிங்கப்பூர் திரும்பிய பிறகு தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்விருவருக்கும் ஹாண்டா கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பது தெரியவந்ததும் அவர்களை 42 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அங்கமாக அவர்கள் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பெரும்பாலான நேரங்களில் ஹாண்டா கிருமித்தொற்றுக்கு ஆளாவோருக்கிடையே அந்தக் காலகட்டத்துக்குள்தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். அவ்விருவரும் வீட்டில் சென்று தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதை விரும்புகின்றனரா என்பதை தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவிக்கவில்லை.

