சிங்கப்பூரர்கள் முன்பைவிட இப்போது துடிப்புடன் இருக்கின்றனர்; அதிகமாக உடற்பயிற்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உட்கொள்ளும் உணவில் உள்ள சராசரி கலோரியின் அளவு அதிகரித்துள்ளது.
அதேவேளையில், உப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்டதைவிட தொடர்ந்து கூடிவருகிறது. ஆனால் அவர்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளது.
சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் சனிக்கிழமை (அக்டோபர் 3) வெளியிட்ட தேசிய மக்கள்தொகைச் சுகாதாரக் கருத்தாய்விலும் தேசிய ஊட்டச்சத்துக் கருத்தாய்விலும் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதாரக் கருத்தாய்வு, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை நடத்தப்பட்டது. இதில், 18 முதல் 74 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்களின் சுகாதாரம், வாழ்க்கைமுறை, அவர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கூறுகள் முதலியவை கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஊட்டச்சத்துக் கருத்தாய்வு, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. இதில், 18 முதல் 69 வயதுக்குட்பட்ட சிங்கப்பூரர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், ஊட்டச்சத்து நிலை ஆகியவை கண்காணிக்கப்பட்டன.
வெளியில் சாப்பிடும் பழக்கமும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளை உட்கொள்ளும் போக்கும் அதிகரித்து வருவதால், கலோரி மற்றும் உப்பின் அளவு உயர்கிறது என்பதையும் இந்தக் கருத்தாய்வு வெளிப்படுத்தியது.
கடந்த ஆண்டில், சிங்கப்பூரர்கள் பொதுவாக வாரத்திற்குக் குறைந்தபட்சம் 9 முறை வெளியிடங்களில் சாப்பிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சூப், குழம்பு, சுவைச்சாறு சார்ந்த சமைத்த உணவுகளில் சேர்க்கப்படும் உப்பு, இந்த அதிகரிப்புக்கு 60 விழுக்காடு பங்களித்ததாகக் கருத்தாய்வு குறிப்பிட்டது.
கோழிச்சோறு, ‘நாசி லெமாக்’, பிரியாணி போன்ற அதிக கலோரிகள் கொண்ட உணவுவகைகள் பொதுவாகப் பலரால் உண்ணப்படுபவை என்றும் வாரியம் சுட்டிக்காட்டியது.
ஆயினும், சர்க்கரையை, குறிப்பாகச் சர்க்கரை கலந்த பானங்களில் இருக்கும் சர்க்கரையை மக்கள் குறைவாகவே உட்கொண்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டது.
பானங்களுக்கான நியூட்ரி கிரேட் முத்திரை மற்றும் விளம்பரத் தடை நடவடிக்கைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவு 2018ஆம் ஆண்டில் 60 கிராமாக இருந்தது. கடந்த ஆண்டு அது 48 கிராமாகக் குறைந்துள்ளது.
2028ஆம் ஆண்டுக்குள் பானங்களுக்கு அப்பால் உப்பு, கொழுப்பைச் சுட்டிக்காட்டும் கட்டாய நியூட்ரி கிரேட் தரக் குறியீட்டு நடவடிக்கைகள், விளம்பரத் தடைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோக்கியமான, குறைந்த உப்பைக் கொண்ட உணவை ஊக்குவிக்க உணவு, பான நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்று வாரியம் தெரிவித்தது.
மேலும், ‘குறைவாகக் கேளுங்கள்’ என்ற இயக்கத்தின்வழி, பொதுமக்கள் வெளியில் உணவருந்தும்போது உப்பு, சுவைச்சாறு, குழம்பு ஆகியவற்றைக் குறைவாகக் கேட்கலாம்.
துடிப்புடன் இருக்கும் சிங்கப்பூரர்களின் விகிதம் அதிகரிப்பு
தேசிய மக்கள்தொகை சுகாதாரக் கருத்தாய்வின்படி, போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடும் குடியிருப்பாளர்களின் விகிதம், 2024ஆம் ஆண்டில் 84.7 விழுக்காட்டிலிருந்து கடந்த ஆண்டு 87.3 விழுக்காட்டுக்குக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2023ஆம் ஆண்டில் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வருகின்றனர் என்பதைக் கருத்தாய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
அன்றாடம் புகைபிடிக்கும் பழக்கமும் நிலையாக உள்ளது. பொது விழிப்புணர்வு, மறுவாழ்வு, அமலாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அணுகுமுறை தொடரும் என்று அமைச்சும் வாரியமும் தெரிவித்துள்ளன.
அத்துடன், நாட்பட்ட நோய், புற்றுநோய்களுக்கான பரிசோதனையில் பங்கேற்போரின் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி நாடத் தயாராக உள்ளனர் என்றும் கருத்தாய்வு சுட்டியது. 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வயதினரிடையே மனநலக் குறைபாடுகள் அதிக அளவில் காணப்பட்டன.
‘மனநலன் ஆதரவுக்கான முதற்கட்டம்’ என்ற திட்டத்தை நிறுவுவதன் மூலம் மனநல ஆதரவை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது இணையம் வழி வாரத்தின் ஏழு நாள்களிலும் 24 மணிநேரத்திலும் மனநல ஆதரவு பெறலாம். தொலைபேசி எண்: 1771.
