அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்ளும் சிங்கப்பூரர்கள்

மூவரில் ஒருவரிடம் உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டுள்ளது

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அளவுக்கதிக உப்பு உட்கொள்கின்றனர்.

இதனால், உயர் ரத்த அழுத்த விகிதம் 2010க்குப் பிறகு கிட்டத்தட்ட இருமடங்காகக் கூடியிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, மூவரில் ஒருவருக்குமேல் உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. இதனால், இதய நோயும் பக்கவாதமும் ஏற்படக்கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.

அத்துடன், மக்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள், குறைவாக நடமாடுகிறார்கள்.

“இந்நிலையில், வாழ்க்கைமுறைப் போராட்டத்தில் நாம் வெற்றிகாணவில்லை,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை கூறினார்.

“நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் இரத்தக்கொழுப்பு போன்ற நாட்பட்ட நோய்கள், நமது வாழ்க்கைமுறையின், குறிப்பாக உணவுப் பழக்கங்களின், விளைவுகளாகும்,” என்றார் திரு ஓங்.

“நாம் நல்லவிதமாக உண்டால் உணவு நமக்கு மருந்தாகலாம். இல்லாவிட்டால், அதுவே நஞ்சாகிவிடலாம்,” என்று ‘புரோஜெக்ட் ரீசெட்’ இதய ஆய்வுத் திட்டத் துவக்க நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட தேசிய சுகாதார, ஊட்டச்சத்து அறிக்கையின்படி, சிங்கப்பூரர்கள் உட்கொள்ளும் உப்பின் அளவு 2019ன் 3,480 மில்லிகிராமில் இருந்து 2022ல் 3,620 மில்லிகிராமுக்கு அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்குப் பரிந்துரைக்கப்படும் 2,000 மில்லிகிராமைவிட இது மிக அதிகம்.

2022ல் 61 விழுக்காட்டினர் பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிக கலோரிகளை உட்கொண்டனர். 2019ல் இது 55 விழுக்காடாக இருந்தது.

உடற்பயிற்சி செய்வோரின் விகிதம் 2019ன் 84.6 விழுக்காட்டிலிருந்து 2022ல் 74.9 விழுக்காடாகக் குறைந்திருந்தது.

ஆனால், சர்க்கரையைக் குறைக்கும் முயற்சிகள் பலனளித்துள்ளன. நீரிழிவு நோய், உயர் ரத்தக்கொழுப்பு ஆகியவற்றின் விகிதங்கள் சற்று குறைந்துள்ளன.

இருந்தாலும், நீரிழிவு நோயின் முக்கிய விளைவான சிறுநீரகச் செயலிழப்பினால் ஒவ்வொருநாளும் சராசரியாக ஆறு பேர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, சர்க்கரை, உப்பு ஆகிய இரண்டும் அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்த இன்னும் அதிக முயற்சி தேவை என்று திரு ஓங் வலியுறுத்தினார்.

இதற்காக, சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தனது அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

சர்க்கரையின் அளவைக் காட்டும் ‘நியூட்ரி கிரேடு’ கட்டாயக் குறியீடு, 2023 கடைசிக்குள் கடைகளில் தயாரிக்கப்படும் பானங்களுக்கும் நடப்புக்கு வரும்.

உணவில் உள்ள உப்பைக் குறைக்க, இதேபோன்ற குறியீட்டை அறிமுகப்படுத்தும் சாத்தியத்தை சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.

சென்ற ஆண்டு நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின்படி, 2010ல் 19.8 விழுக்காட்டினரைப் பாதித்திருந்த உயர் இரத்த அழுத்தம், 2022ல் 37 விழுக்காட்டினரைப் பாதித்திருந்தது.

இதற்கு அதிகளவு உப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறிய தேசியப் பல்கலைக்கழக இதய நிலையத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் டான் ஹுவே சீம், ஒட்டுமொத்த மக்களும் உப்பை சிறிதளவு குறைத்தாலும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

தேசிய ஆய்வில் சில நல்ல வி‌ஷயங்களும் கண்டறியப்பட்டன. நியூமோகாக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மூத்தோரின் எண்ணிக்கை 2019ன் 10.3 விழுக்காட்டிலிருந்து 2022ல் 22.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளின் விகிதம் 2019ன் 9.5 விழுக்காட்டிலிருந்து 2022ல் 8.5 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. உயர் ரத்தக் கொழுப்பு உள்ளவர்களின் விகிதம் 2019ன் 39.1 விழுக்காட்டிலிருந்து 31.9 விழுக்காடாக 2022ல் குறைந்தது.

பானங்களில் இனிப்பு குறைக்கப்பட்டதும் ‘நியூட்ரி கிரேடு’ குறியீடு அறிமுகமானதும் உயர் ரத்தக் கொழுப்பு குறைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் ஊட்டச்சத்து, உணவியல் சங்கத் தலைவர் கல்பனா பாஸ்கரன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!