சிங்கப்பூரர்கள் அனைவரும் குடியரசின் 59ஆம் தேசிய தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை தேசியக் கொடியைக் கட்டடங்களில் கட்டுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
அலுவலகங்கள், கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றில் தேசியக் கொடியைக் கட்டலாம் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஜூன் 27ஆம் தேதி அறிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் தேசியக் கொடியைக் கட்டுவதற்கான பொதுவான விதிகள் தளர்த்தப்பட்டிருக்கும்.
கொடிக்கம்பங்கள் இல்லாமலும் இரவு நேரத்தில் ஒளியூட்டும் கருவிகள் பொருத்தப்படாமலும் தேசியக் கொடிகளைப் பறக்கவிடலாம் என்று அமைச்சு கூறியது.
அதேநேரத்தில் கிழிந்த அல்லது சேதமடைந்த கொடிகளைக் கட்டவேண்டாம் என்றும் அத்தகைய கொடிகளைக் கறுப்புப் பையில் பொட்டலமிட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சு நினைவுறுத்தியது.
“தேசியக் கொடியானது சிங்கப்பூரின் அடையாளம். நமது ஒற்றுமை, மீள்திறன் ஆகியவற்றின் சின்னம். அதற்கு உரிய மரியாதை தருவதும் பொருத்தமான முறையில் அதைப் பயன்படுத்துவதும் அவசியம்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
தேசியக் கொடியைப் பறக்கவிடுதல் தொடர்பான முழுமையான வழிகாட்டிக் குறிப்புகளுக்கு தேசிய மரபுடைமைக் கழகத்தின் இணையப் பக்கத்தை நாடலாம்.

