பொதுத் தேர்தலில் சிங்கப்பூரர்கள் வழங்கியுள்ள தீர்ப்பிற்குத் தலைவணங்குவதாகவும் அதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (மே 3) நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி, 87 இடங்களைக் கைப்பற்றியது. பாட்டாளிக் கட்சி கடந்த முறை வென்ற அதே பத்து இடங்களை இம்முறையும் தக்கவைத்துக்கொண்டது.
இந்தப் பொதுத் தேர்தலில் மசெகவிற்கு 65.57 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.
வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டபின் கருவூலக் கட்டடத்தில் பிரதமர் வோங் தம் சக குழுவினருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சிங்கப்பூரர்கள் அரசின்மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், தம் குழுவினர்க்கும் ஆதரவளித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“உலகில் இப்போது நிலவும் பதற்றமிக்கச் சூழலைத் திறம்பட எதிர்கொள்ளும் நிலையில் சிங்கப்பூரை வைத்திருக்க இந்த முடிவுகள் உதவும்,” என்றார் திரு வோங்.
பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் எதிர்பார்த்ததுபோல் பாட்டாளிக் கட்சி பத்து இடங்களில் வென்றுவிட்டதாகவும் சொன்னார்.
அத்துடன், அவர்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்தால் இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களும் அவர்கள் வசமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
‘அடையாள அரசியலை நிராகரித்த சிங்கப்பூரர்கள்’
இந்தத் தேர்தலில் இனமும் சமயமும் அரசியலில் கலக்கப்பட்டதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
“இது வெளிநாட்டுக் குறுக்கீடு மட்டுமன்று. இணையம் என்பதால், இன அடிப்படையில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூரர்களிடமிருந்தும் எதிர்மறையான, நஞ்சை விதைக்கும் பல கருத்துகள் பகிரப்பட்டன,” என்றார் அவர்.
ஆயினும், எல்லாக் கட்சிகளுமே அத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து, சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தின்மீது தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியது தம்மை நெகிழச் செய்ததாகப் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், “சிங்கப்பூரர்கள் ஒட்டுமொத்தமாக அடையாள அரசியலைப் புறக்கணித்து, பல சமய, பல கலாசார சமூகத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன,” என்றும் அவர் சொன்னார்.
எதிர்க்கட்சித் தொகுதிகளிலும் சேவையாற்ற உறுதி
பாட்டாளிக் கட்சி வென்ற தொகுதிகளில் போட்டியிட்ட மசெக வேட்பாளர்களுக்குப் பிரதமர் நன்றி கூறிக்கொண்டார்.
“அவர்கள் வெற்றிபெறாதபோதும் கடும் போட்டியளித்து, தங்கள் முத்திரையைப் பதித்தனர்,” என்று அவர் சொன்னார்.
மேலும், “அத்தொகுதிகளில் மசெக தொடர்ந்து கடுமையாக உழைக்கும். ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டோம். தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, சேவையாற்றி, குடியிருப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற பாடுபடுவோம்,” என்றும் திரு வோங் கூறினார்.