நேப்பாள வெள்ளத்தில் தொலைந்த குடும்பத்தைத் தேடும் சிங்கப்பூரர்கள்

நேப்பாள வெள்ளத்தில் தொலைந்த குடும்பத்தைத் தேடும் சிங்கப்பூரர்கள்

2 mins read
7d1a2f3a-822a-43da-bfcd-4648021f9e75
நேப்பாள வெள்ளத்தில் காணாமல்போன சிங்கப்பூர்த் தம்பதியரான சுமித் ராவ்லா (இடது), சுபாஷி ராவ்லா. - படம்: எஸ்ஆர்கெயுனிவெர்ஸ்என்பி/ இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

தீப்தி பட்நாகரின் பிறந்தநாள் இம்மாதம் 26ஆம் தேதி வந்தது. ஆனால், இந்த ஆண்டு அந்த மகிழ்ச்சியான தருணம் சோகமாக மாறியுள்ளது. வட நேப்பாளப் பகுதியை அந்நாளில் தாக்கிய கடுமையான திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த சகோதரி சுபாஷி ராவ்லா (49), அவரது கணவர் சுமித் ராவ்லா (53) ஆகிய இருவரும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாய யாத்திரைக்காக திபெத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தம்பதியினர், திபெத் எல்லைக்கு அருகில் உள்ள நேப்பாள நகரமான திமுரே அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடைசியாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுரேவுக்கு அருகில் உள்ள கட்டே கோலாவில் அமைந்துள்ள ‘ஹோட்டல் கைலா‌ஷ்’ என்ற விடுதியில் அவர்கள் முந்தைய இரவைக் கழித்த நிலையில் அந்த விடுதி சேறும் சகதியுமான வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தன் சகோதரி, மைத்துனரைக் கண்டுபிடிக்க சாத்தியமான அனைத்து வழிகளையும் முயன்றுவரும் பட்நாகருக்குக் கடந்த சில நாள்கள் ஒரு கொடிய அனுபவமாக இருந்தது.

தமது தேடுதலைத் தீவிரப்படுத்துவதற்காக அவர் தனது சகோதரர் குஷால் அப்ரோலுடன் புதுடெல்லியிலிருந்து இம்மாதம் 28ஆம் தேதி காத்மாண்டு சென்றடைந்தார்.

நேப்பாளத் தலைநகரில் உள்ள விடுதியின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவர், “யாராவது என்னை ஓங்கி அறைந்து இந்த மோசமான கனவிலிருந்து என்னை எழுப்பக்கூடாதா என்று தோன்றுகிறது,” எனக் கூறினார்.

இருப்பினும், சகோதர-சகோதரி இருவரும் நம்பிக்கையைக் கைவிடாமல், தம்பதியினரைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

“அந்த ஒரு விழுக்காட்டு வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும்; யாராவது ஒருவர் கடைசி மூச்சோடு உயிருடன் இருக்கக்கூடும்,” என்று பட்நாகர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

இந்தச் சகோதர-சகோதரி இணையர் காத்மாண்டுவில் நேப்பாள அரசு அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ராவ்லா தம்பதியினர் பயணம் செய்த ‘இமயமலை பனிப்பாறைகள்’ பயண நிறுவனரான சாகர் பாண்டே ஆகியோரைச் சந்தித்து உதவி கேட்டு வருகின்றனர்.

அந்தத் தம்பதியினரைப் பற்றியோ அல்லது அவர்களுடன் திபெத் நோக்கிச் சென்ற 40க்கும் மேற்பட்ட பிற நபர்களைப் பற்றியோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இம்மாதம் 26ஆம் தேதி காலை 8 மணியளவில், அந்தப் பயணக் குழுவுடன் இருந்த வழிகாட்டியிடம் தான் கடைசியாகப் பேசியதாக பாண்டே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்