சிங்கப்பூரில் நிலவும் வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொள்ள முனையும் வெளிநாட்டுத் தரப்பினரிடமிருந்து நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பிளவுபட்ட உலகச் சூழலில், தேசத்தின் எதிர்காலம் குறித்த முடிவுகளை வெளிநாட்டுத் தலையீடின்றிச் சிங்கப்பூரர்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அவர் வெளியுறவு அமைச்சின் ஒதுக்கீட்டு விவாதத்தின்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டவரின் தூண்டிவிடும் போக்கிற்கு எதிரான முதல் தற்காப்பு அரண், விழிப்புணர்வும் பகுத்தறியும் திறனும் கொண்ட பொதுமக்கள்தான் என்றார் திருவாட்டி சிம் ஆன். சிங்கப்பூரின் பன்முகத்தன்மையும் மின்னிலக்கம் வழியாக இணைக்கப்பட்டுள்ள மக்கள்தொகையும் அதனை எளிதில் ஈர்க்கக்கூடியதாகவும் பாதிக்கப்படக்கூடியதாகவும் மாற்றுகிறது என்று அவர் தெரிவித்தார்.
மேம்பட்ட மின்னிலக்கக் கருவிகளாலும் செயற்கை நுண்ணறிவாலும் வெளிநாட்டு இயக்கங்களின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இனத்தைவிட மற்றோர் இனத்தை ஈர்க்கும் வகையிலான இணையப் பதிவுகளை எதிர்கொள்ளும்போது சிங்கப்பூரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் திருவாட்டி சிம் ஆன்.
“ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரைக் குறிவைக்கும் இணையக் கருத்துரைகள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இவற்றில் சில நமது நம்பிக்கையைக் குலைக்கும் அல்லது நமது வேறுபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளாக இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், சிங்கப்பூர் தனது தேசிய நலன்கள் குறித்துத் தெளிவான பார்வையுடன் இருக்க வேண்டும்; உறுதியான முடிவுகளை எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் திருவாட்டி சிம் ஆன்.
“மிக முக்கியமாக, நாம் நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். நமது நலன்களையும் நமது எதிர்காலத்தையும் பாதுகாக்க நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டில் மீள்திறனை வளர்க்க, மாணவர்கள், இளையர்கள், வர்த்தகங்கள், அடித்தளத் தலைவர்களுடனான ஈடுபாட்டை அமைச்சு மேம்படுத்தியுள்ளது. வெளியுறவுக் கொள்கை வீட்டிலிருந்தே தொடங்குகிறது என்று கூறிய திருவாட்டி சிம் ஆன், ஒற்றுமையும் மக்கள் நம்பிக்கையும்தான் உலக அரங்கில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிப்புறத்தில், சிங்கப்பூர் தனது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவுடனான உறவுகளை விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக வலுப்படுத்தியது இதன் முக்கிய அம்சமாகும். இது கடந்த ஆண்டு (2025) பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது இரு நாடுகளாலும் ஏற்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.
ஒரு புதிய வரைவுத்திட்டத்தின்கீழ், சிங்கப்பூரும் உலகின் நான்காவது பெரிய பொருளியலைக் கொண்ட நாடான இந்தியாவும் உயர்நிலை உற்பத்தி, மின்னிலக்கமயமாக்கம், இணைப்புத்திறன் ஆகியவற்றில் ஒத்துழைக்க இணக்கம் காணப்பட்டது. அதே வேளையில் உபகாரச்சம்பளங்கள், வேலைப்பயிற்சிகள் மூலம் இருநாட்டவரின் உறவுகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூர், 2025ல் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுடனான உறவுகளையும் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக மேம்படுத்தியதுடன் தென்கொரியாவுடன் புதிய உத்திபூர்வப் பங்காளித்துவத்தையும் ஏற்படுத்திக்கொண்டது.
இந்த உறவுகள் தற்காப்பு போன்ற முக்கியமான துறைகளையும் எரிசக்தி, தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை போன்ற வளர்ந்துவரும் துறைகளையும் உள்ளடக்கியவை.
இத்தகைய முயற்சிகள், சிங்கப்பூர் தனது இறையாண்மையையும் சமூக ஒற்றுமையையும் கட்டிக்காப்பதையும், உலக அரங்கில் மீள்திறன் மிக்க நாடாகத் திகழ்வதையும் உறுதிசெய்கின்றன என்று திருவாட்டி சிம் ஆன் தெரிவித்தார்.

