வேலை செய்ய தங்களுக்கு ஆகத் தோதான நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சிங்கப்பூரர்கள் சமமான வேலை-வாழ்க்கைச் சூழலை (work-life balance) வழங்கும் நிறுவனங்களையே விரும்புகின்றனர்.
ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூர் நிறுவனம் வெளியிட்ட ஆக அண்மைய நிறுவனத் தர ஆய்வறிக்கையில் (Employer Brand Research) இந்த விவரம் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வறிக்கை புதன்கிழமை (ஜூன் 25) வெளியிடப்பட்டது.
சமமான வேலை-வாழ்க்கைச் சூழல்தான் சிங்கப்பூரர்கள் ஆக அதிக முக்கியத்துவம் தரும் அம்சமாகத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விளங்குகிறது. நல்ல சம்பளம், அனுகூலங்கள், வேலைப் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் அதற்கு அடுத்த நிலையில் வந்தன.
சிங்கப்பூரில் உள்ள வேலை செய்யும் வயதில் இருக்கும் 2,522 ஊழியர்களிடம் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
ரேண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு இயக்குநரான டேவிட் பிலாஸ்கோ, “நல்ல சம்பளம், அனுகூலங்களை வழங்குவதில் இப்போது போட்டித்தன்மை அதிகம் இருந்துவருவதால் சமமான வேலை-வாழ்க்கைச் சூழல்தான் இப்போதெல்லாம் ஊழியர்களை ஈர்ப்பதிலும் தக்கவைத்துக்கொள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்றார்.
18லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஜென் ஸீ தலைமுறையினர், 29லிருந்து 44 வயதுக்கு உட்பட்ட மில்லெனியல்ஸ் தலைமுறையினர், 45லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட ஜென் எக்ஸ் தலைமுறையினர் ஆகிய மூன்று வயதுப் பிரிவினரும் ஒரே இரண்டு அம்சங்களுக்குத்தான் ஆக அதிக முக்கியத்துவம் தருகின்றனர். எனினும், ஜென் ஸீ, மில்லெனியல்ஸ் இரு பிரிவினரும் வேலைப் பாதுகாப்பைவிட பதவி உயர்வுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
சமமான வேலை-வாழ்க்கைச் சூழல்தான் ஊழியர்கள் வேறு வேலைக்கு மாறிக்கொள்ள முக்கியக் காரணமாக இருந்துவருகிறது. கருத்தாய்வில் பங்கேற்ற வேலை மாறியோர் அல்லது மாறக் காத்திருப்போரில் 41 விழுக்காட்டினர் சமமான வேலை-வாழ்க்கைச் சூழலுக்காகத்தான் அவ்வாறு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

