அதிபர் தர்மன்: உதவும் மனப்பான்மையால் ஒளிமயமான எதிர்காலம்

3 mins read
44cf55b0-8d9d-43d0-b746-571d0ddd5e7f
இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய 15 வயது மார்க் இலி ஃபெர்னாண்டோ. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதன் காரணமாக எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்று தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அதிபர் தர்மன், மற்றவர்களுக்கு உதவி செய்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் மக்கள், நாட்டின் வலிமையைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரின் அதிபராகத் திரு தர்மன் பொறுப்பேற்றார்.

அன்று முதல் இன்று வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் டிசம்பர் 31ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

“உங்கள் அதிபராகக் கடந்த 15 மாதங்களாக நான் பதவி வகித்து வருகிறேன். சிங்கப்பூரர்களுக்கு என்றே உள்ள தனித்துவம்வாய்ந்த குணம், எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்பது எனக்கு நம்பிக்கையூட்டுகிறது,” என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

தமது புத்தாண்டுச் செய்தியில் மூவரின் கதையை அவர் பகிர்ந்துகொண்டார்.

அவர்களில் ஒருவர் 15 வயது மார்க் இலி ஃபெர்னாண்டோ.

செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியன்று தமது வசிப்பிடம் அருகில் ஒருவருக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மைரெஸ்பாண்டர் செயலி மூலம் மார்க்கிற்குத் தெரியவந்தது.

செயலியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு மார்க் விரைந்தார்.

அங்கு அவர் ஆடவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார்.

சாரணர் படையில் தமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை மார்க் நடைமுறைப்படுத்தினார்.

மின்தூக்கித் தளத்துக்கு விரைந்த மார்க், அங்கு வைக்கப்பட்டிருந்த ‘ஏஇடி’ இயந்திரத்தை (மின்சாரம் பாய்ச்சி இதயத்தை மீண்டும் துடிக்கவைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரம்) எடுத்துச் சென்றார்.

சுயநினைவின்றி கிடந்த ஆடவரின் அண்டைவீட்டுக்காரர்கள் இருவரின் உதவியோடு ‘ஏஇடி’ இந்திரத்தை மார்க் பயன்படுத்தி ஆடவரின் இதயத்தை மீண்டும் துடிக்கச் செய்தார்.

அந்த ஆடவர் உயிர் பிழைத்தார்.

“மார்க், பாத்லைட் பள்ளியைச் சேர்ந்தவர். அவர் ஆட்டிசம் எனும் தொடர்புதிறன் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர். ஆனால் மற்றவர்களுக்கு உதவும் குணத்தைக் கொண்டுள்ளார். அது தமது பொறுப்பு என்றும் அவர் நம்புகிறார். அவர் தனித்துவம் வாய்ந்தவர் என்று சொன்னால் அது மிகையன்று. ஓர் உயிரைக் காப்பாற்றியுள்ளார்,” என்று புகழாரம் சூட்டினார் அதிபர் தர்மன்.

தாசேக் சேலர்ஸ் பெண்கள் காற்பந்துக் குழுவுக்குத் தலைமைதாங்கும் டாக்டர் அயின் அஸ்மானையும் அதிபர் தர்மன் உதாரணம் காட்டினார்.

வசதி குறைந்த இளையர்களுக்கு விளையாட்டு மூலம் உதவ இந்த காற்பந்துக் குழு அமைக்கப்பட்டது.

டாக்டர் அயின் முதலில் வாரயிறுதிகளில் தொண்டூழியராகச் செயல்பட்டதைத் திரு தர்மன் சுட்டினார்.

வசதி குறைந்த இளையர்களுக்கு உதவுவதில் அதிக ஈர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, அதில் முழுநேரமாகப் பணியாற்ற டாக்டர் அயின் முடிவெடுத்தார்.

சில நேரங்களில் வாரத்தில் எழு நாட்களும் அவர் இளையர்களுக்கு உதவினார்.

தங்கள் திறமைகளை அடையாளம் கண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட இளையர்களுக்கு டாக்டர் அயின் உதவி வருகிறார்.

அணியைச் சேர்ந்த இளம் காற்பந்து வீராங்கனைகளுடன் நெருங்கிப் பழக அவர் காற்பந்து விளையாடத் தொடங்கினார்.

டாக்டர் அயின் உயிர்மருத்துவப் பொறியியல் பட்டதாரி. அவர் நினைத்திருந்தால் அதுதொடர்பான பல்வேறு பணிகளில் சேர்ந்திருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்த அர்த்தமுள்ள வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்,” என்றார் அதிபர் தர்மன்.

65 வயது திருவாட்டி ஜெனி வோங்கையும் அதிபர் தர்மன் பாராட்டினார்.

இவர் பொது நூலகங்களிலும் மருத்துவமனை ஒன்றிலும் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட நோயாளிகள் செல்லும்போது அவர்களுக்குத் துணையாக திருவாட்டி வோங் செல்கிறார்.

நோயாளிகள் மனம்விட்டு பேசுவதை அவர் காது கொடுத்து கேட்கிறார்.

திருவாட்டி வோங், ஓரே ஆண்டில் 1,200 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொண்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதைத் திரு தர்மன் சுட்டினார்.

இது, பலர் தங்கள் வாழ்நாளில் தொண்டூழியத்துக்காக ஒதுக்கும் நேரத்தைவிட அதிகம்.

“பிறருக்கு உதவி செய்து, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து, அக்கம் பக்கத்தில் அல்லது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவம் வாய்ந்தவராகத் திகழ முடியும் என்பதை இந்த மூவரும் நிரூபித்துள்ளனர். இந்தப் பண்புநெறியே நமது நாட்டை வலிமையானதாக்குகிறது,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்