பாலஸ்தீன ஆணையத்தை ஆதரிக்க சிங்கப்பூரின் இரு புதிய திட்டங்கள்

பாலஸ்தீன ஆணையத்தை ஆதரிக்க சிங்கப்பூரின் இரு புதிய திட்டங்கள்

1 mins read
bb9e1734-2f13-435b-805e-87d66fc782a4
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணன். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பாலஸ்தீன ஆணையத்தை ஆதரிக்க 2026ஆம் ஆண்டு சிங்கப்பூர் இரு புதிய திட்டங்களைத் தொடங்கவுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகளும் இத்திட்டங்களில் அடங்கும். பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் காலம் வரும்போது அதற்கேற்ப அதன் மக்களைத் தயார்ப்படுத்த இத்திட்டங்களை சிங்கப்பூர் தொடங்குகிறது.

முதல் திட்டம் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு அமைப்புடன் (International Cooperation Agency) சேர்ந்து மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்தார். இதன்கீழ் பாலஸ்தீன அரசாங்கக் காவல்துறைக்கு சமூகக் கண்காணிப்பு (community policing) தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதோடு, வளர்ந்துவரும் இளம் பாலஸ்தீனத் தலைவர்களுக்கான திட்டம் ஒன்றையும் சிங்கப்பூர் தொடங்கும். இதன்கீழ் ஆளுமை, அரசாங்க நிர்வாகம் ஆகியவற்றில் சிங்கப்பூருக்கு உள்ள அனுபவம் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்று டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் கூறினார்.

“பாலஸ்தீன ஆணையத்தை ஆதரிக்க மேலும் பங்காற்ற நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றார் டாக்டர் பாலகிரு‌ஷ்‌ணன்.

பாலஸ்தீன வளர்ச்சிக்கான கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு (சீப்பேட்) சம்பந்தப்பட்ட நான்காவது மாநாட்டில் டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் பேசினார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளுடன் அச்சந்துப்பு நடந்தது.

சீப்பேட், 2013ஆம் ஆண்டு ஜப்பானால் தொடங்கப்பட்டது. அது, பாலஸ்தீன வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளை ஒன்றுசேர்க்கிறது. மியன்மார் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

குறிப்புச் சொற்கள்