சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை கான் சிங் ஹுவீ, 400 மீ. எதேச்சை பாணி நீச்சலில் 15 ஆண்டுகள் நீடித்த தேசியச் சாதனையை முறியடித்துள்ளார். அண்மையில் 22ஆம் பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீர்ப் போட்டிகளில் அந்தச் சாதனையைப் படைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) 400 மீ எதேச்சை பாணி நீச்சலில் இலக்கை எட்ட அவர் எடுத்துக்கொண்ட நேரம் 4:09.81. இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு டிசம்பரில் தென்கிழக்காசிய விளையாட்டுகளின்போது லினெட் லிம் தேசியச் சாதனையைப் படைத்திருந்தார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட நேரம் 4:11.24.
கான் ஏற்கெனவே 800 மீ, 1500 மீ எதேச்சை பாணி நீச்சல்களிலும் தேசியச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
கான் 400 மீ எதேச்சை பாணி நீச்சல் தகுதிச்சுற்றில் அவருடைய பிரிவில் முதலாவதாகவும் ஒட்டுமொத்தத்தில் 13வதாகவும் வந்தார். வரும் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறினார்.