கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் செயல்திறன்மிக்கதாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது ஊக்குவிப்பதாக இருந்தாலும், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்தபடி விரைவாகக் குறையவில்லை என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் கல்வித் துறைத் தலைவரும் பேராசிரியருமான திரு டியோ யிக் யிங்.
கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்து இரு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் சமூகத்தில் ஏற்படும் கிருமிப் பரவல் குறைந்திருக்க வேண்டும் என்றார் அவர். ஆனால், விடுதிக்கு வெளியே தங்கியிருக்கும் வேலை அனுமதிச் சீட்டு கொண்ட ஊழியர்கள், சமூகத்தில் மற்றவர்களிடையே கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதல் அளித்தாலும் இன்னும் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் நீடிப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மைய நாட்களில் கண்டறியப்பட்ட புதிய கிருமித்தொற்று சம்பவங்கள், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கும் தொற்று ஏற்படுவதைக் காட்டுவதாகத் தெரிவித்த அவர், வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் இருக்கும் சிலர் வெளியில் சென்று வருவதை இது காட்டுகிறது என்றார்.
"அந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது, நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் செயல்திறன்மிக்கதாக இருப்பதை அறிய முடிகிறது. ஆனாலும், நாம் எதிர்பார்த்த அளவிற்கு அது குறையவில்லை என்பது சற்று ஏமாற்றம் தருகிறது," என்றார் அவர்.
அதனால்தான் இன்னும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது என்றார் அவர்.
சமூகத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இன்னும் இருப்பது குறித்து தமது அதிருப்தியை தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியொ யீ சின் தெரிவித்தார்.
ஆனால், மற்ற நாடுகளின் அனுபவத்தை வைத்து பார்க்கும்போது புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறை இரண்டு வார கால முயற்சிகள் மட்டும் போதாது என்றார் அவர்.
வரும் ஜூன் மாதம் முதல் தேதி வரை கிருமிப் பரவல் முறியடிப்பு அதிரடி நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை என்று இருவரும் குறிப்பிட்டனர்.
"இந்தக் கிருமி மனிதர்களுக்கிடையே இருக்கவும் தொடர்ந்து பரவவும் வழி கண்டுபிடித்து, நம்முடன் தொடர்ந்து இருக்கும் திறன் வாய்ந்தது," என்று குறிப்பிட்ட பேராசிரியர் லியோ, "நாம் எளிதாக சமாளித்துவிடக்கூடிய விதத்திலான எளிய கிருமியல்ல இது. நமக்குத் தெரியாமலேயே அது மற்றவர்களுக்குப் பரவும் தன்மை வாய்ந்தது," என்றார்.
கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்ற கேள்விக்கு, "நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், தற்போது நடப்பில் இருக்கும் கிருமிப் பரவல் முறியடிப்பு அதிரடி நடவடிக்கைகள் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு, கிருமி மீண்டும் வரும்," என்றும் பேராசிரியர் லியோ எச்சரித்தார்.

