சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் செப்டம்பர் மாதம் 2 விழுக்காடு சரிந்தது.
ஆகஸ்ட் மாதம் 2.2 விழுக்காட்டிலிருந்து செப்டம்பர் மாதம் அது தணிந்ததாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் தெரிவித்தன.
சேவை, சில்லறை வர்த்தகம், பிற பொருள்கள் ஆகியவற்றுக்கான பணவீக்கம் குறைந்ததே அதற்குக் காரணம் என்று அமைச்சும் ஆணையமும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) அறிக்கை வெளியிட்டன.
மாதத்துக்கு மாதம் என்ற அடிப்படையில் மூலாதார விலை செப்டம்பர் மாதத்தில் 0.1 விழுக்காடு அதிகரித்தது. அதில் தங்குமிடமும் தனியார் போக்குவரத்தும் சேர்க்கப்படவில்லை.
பயனீட்டாளர் விலை குறியீடு என்று அறியப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 0.1 விழுக்காடு குறைந்து 2.2 விழுக்காடாகப் பதிவானது.
மின்சாரம், எரிசக்தி ஆகியவற்றின் பணவீக்கம் முந்தைய இரண்டு மாதங்களில் இருந்ததைப் போல செப்டம்பர் மாதத்திலும் 8.7 விழுக்காடாக நீடித்தது.
இவ்வாண்டு ஜூலை மாதம் கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தின் அதிகரிப்பு அதற்குக் காரணம்.
தங்குமிட வசதிகளின் கட்டணமும் உணவு விலையும் 0.1 விழுக்காடு அதிகரித்து 0.9 விழுக்காடாகவும் 2.4 விழுக்காடாகவும் பதிவானது.
வீட்டுக் கடன்கள் துரிதமாக அதிகரித்ததாலும் சமைக்கப்படாத உணவு, உணவுச் சேவைகளின் பணவீக்கம் அதிகரித்ததாலும் அந்த நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் 7.5 விழுக்காடாக இருந்த தனியார் போக்குவரத்துப் பணவீக்கம் படிப்படியாக அதிகரித்த கார் விலையால் கடந்த மாதம் 7.1 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
சில்லறை, வர்த்தகம், பிற பொருள்களின் பணவீக்கம் கடந்த மாதம் 1.2 விழுக்காடானது. ஆகஸ்ட் மாதம் அது 1.8 விழுக்காடாக இருந்தது.
எரிசக்திப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைச் சுட்டிய அமைச்சும் ஆணையமும் தொடர்ந்து அது அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், இறக்குமதி பணவீக்கம் 2027ஆம் ஆண்டு தணியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
