சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் மாற்றமின்றி இருந்தது. ஆண்டு அடிப்படையில் அது 0.6 விழுக்காடாக இருந்தது. சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பொருள்களின் விலை கூடியது. ஆனால், உணவு, சேவை முதலிய துறைகளில் காணப்பட்ட குறைவான விலைவாசி ஏற்றம் அதனைச் சரிக்கட்டியது.
அடிப்படைப் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 0.7 விழுக்காடாக இருந்தது. மார்ச்சில் அது நான்காண்டு காணாத 0.5 விழுக்காட்டைத் தொட்டது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் புதன்கிழமை (ஜூலை 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அடிப்படைப் பணவீக்கத்தில் தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் முதலியவை சேர்த்துக்கொள்ளப்படமாட்டா. குடும்பச் செலவுகளை மேலும் சிறந்த முறையில் பிரதிபலிக்க அது உதவும்.
ஜூன் மாதத்திற்கான ஒட்டுமொத்தப் பணவீக்கத்திலும் மாற்றமில்லை. அது ஆண்டு அடிப்படையில் 0.8 விழுக்காடாக இருந்தது. தனியார் போக்குவரத்துக் கட்டணங்கள் கூடின. தங்குமிடச் செலவுகள் மிகக் குறைந்த அளவில் ஏற்றங்கண்டிருந்தன.
பொருளியல் வல்லுநர்கள் புளூம்பெர்க் நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னுரைத்ததைவிட ஜூன் மாதத்தில் அடிப்படை, ஒட்டுமொத்தப் பணவீக்கம் இரண்டுமே குறைவாக இருந்தன. அடிப்படைப் பணவீக்கம் 0.7 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 0.9 விழுக்காடாகவும் இருக்கும் என்று அவர்கள் கணித்திருந்தனர்.
இவ்வாண்டு முழுமைக்குமான பணவீக்க முன்னுரைப்பில் மாற்றமில்லை என்று நாணய ஆணையமும் அமைச்சும் தெரிவித்தன. அடிப்படைப் பணவீக்கம் 0.5 விழுக்காடாகவும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் 1.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று அவை எதிர்பார்க்கின்றன. வெளிப்புறச் சூழலில் நிலவும் அதிக ஆபத்துகளுக்கு இடையே பணவீக்கத்திற்கான நிச்சயமற்றதன்மை தொடர்ந்து கூடுதலாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

