நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: லாரன்ஸ் வோங்

நிலையற்ற சூழலில் சிங்கப்பூரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: லாரன்ஸ் வோங்

2 mins read
ஆயுதப்படையின் பாதுகாப்புத் திறன்களைப் பிரதமர் பார்வையிட்டார்
b849c13b-b065-4d21-a474-8398952fdbec
மண்டாய் ஹில் முகாமில் அமைந்துள்ள ஆயுதப் படையின் 6ஆம் பிரிவிற்கு வருகையளித்த பிரதமர் லாரன்ஸ் வோங், தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

மத்திய கிழக்கில் நிலவிவரும் பூசல்கள் காரணமாகச் சிங்கப்பூர் அண்மையில் எரிசக்தியில் கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் நமது பாதுகாப்பும் கூட மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 9) காலை மண்டாய் ஹில் முகாமில் (Mandai Hill Camp) அமைந்துள்ள ஆயுதப்படையின் 6ஆம் பிரிவுக்குப் பிரதமர் வருகையளித்தார்.

அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் ஆண்டுகளில் உலகில் மேலும் பல சீர்குலைவுகளுக்குச் சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

“இதுதான் இப்போது நாம் வாழும் உலகின் உண்மைநிலை,” என்றார் அவர்.

6ஆம் பிரிவைச் சேர்ந்த வல்லுநர் (கீழே) ஒருவர் வானூர்தி இயக்குவதைப் ரதமர் லாரன்ஸ் வோங் பார்வையிட்டார்.
6ஆம் பிரிவைச் சேர்ந்த வல்லுநர் (கீழே) ஒருவர் வானூர்தி இயக்குவதைப் ரதமர் லாரன்ஸ் வோங் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது வருகையின் ஒரு பகுதியாக, உளவு, கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் (ISR) அடிப்படையில் இயங்கும் பல்வேறு ஆளில்லா வானூர்திகளைப் பிரதமர் பார்வையிட்டார்.

அவருடன் வந்திருந்த தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் ராணுவ வீரர்களுடன் உரையாடினார்.

சிக்கலான நகர்ப்புறச் சூழல்களில் நிகழ்நேர விழிப்புணர்வை வழங்க இந்த வானூர்திகள் இயங்கும். செயற்கை நுண்ணறிவு, கணினி நுட்பங்களைப் பயன்படுத்தி வானூர்திகளிலிருந்து தரவுகள் பெறப்படும்.

இத்தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரைவான ராணுவத் தாக்குதலைச் சாத்தியமாக்கலாம்.

காட்சிப்படுத்தபட்ட வானூர்திகளில், கடந்த ஆண்டு நடைபெற்ற ‘எக்சர்சைஸ் வாலபி’ ஒருதரப்புப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட வி-15 வகை ஆளில்லா வானூர்தியும் இடம்பெற்றது.

“வானூர்திகளைச் செலுத்தும்போது சூழல்கள் பலவகையில் மாறுபடலாம். எனவே, எப்போதும் நான் என் மீதும் என் சக வீரர்கள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பது அவசியம்,” என்றார் வி-15 வகை ஆளில்லா வானூர்தியை இயக்கிய 3SG ஹிமேஷன், 22.

போர்முறைகள் மாற்றம்கண்டு வருகின்றன என்று குறிப்பிட்டார் பிரதமர் வோங்.

“ஆளில்லா அமைப்புகள் அதிகரிப்பதையும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதையும் போரிடுவதற்கான புதிய வழிகள் பெருகுவதையும் நாம் காண்கிறோம்,” என்றார் அவர்.

புதிய பாதுகாப்பு திறன்களைப் பல்வேறு வழிகளில் சிறப்பாக ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட அவர் ஆயுதப்படையில் உள்ள வீரர்கள் தொடர்ந்து மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்புத் திறன்களில் முதலீடு செய்யும் என்று உறுதிகூறினார்.

“நிலையற்ற இந்த உலகில் நாம் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வோம்,” என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்