சிங்கப்பூரின் மின்வணிகத் தளச் சந்தை 2025ஆம் ஆண்டில் 21 விழுக்காடு வளர்ச்சி கண்டு, மொத்த மதிப்பு 5.9 பில்லியன் அமெரிக்க டாலரை (S$7.5 பில்லியன்) எட்டியது.
இம்மதிப்பு 2024ஆம் ஆண்டில் 4.9 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த வளர்ச்சியானது, தென்கிழக்காசியாவின் வளர்ச்சியை ஒத்திருந்தது.
ஆண்டு அடிப்படையில் பார்க்கையில், தென்கிழக்காசியாவில் மின்வணிகத் தளச் சந்தையானது 2025ஆம் ஆண்டில் 22.8 விழுக்காடு ஏற்றம் கண்டு, அதன் மொத்த வணிக மதிப்பு 157.6 பில்லியன் டாலராக உயர்ந்தது.
‘மொமென்டம் ஒர்க்ஸ்’ என்ற சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட நான்காவது ‘தென்கிழக்காசியாவில் மின்வணிகம்’ என்ற அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூரின் மின்வணிகத் தளச் சந்தையில் 52 விழுக்காட்டுப் பங்குடன் ‘ஷாப்பி’ முதலிடத்தில் உள்ளது.
லசாடா 36 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும் அமேசான், டிக்டாக் ஷாப் இரண்டும் ஆறு விழுக்காட்டுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
இவ்வட்டாரத்தில் 2025ஆம் ஆண்டு ஷாப்பி, லசாடா, டிக்டாக் ஷாப் (டோக்கோபீடியாவையும் சேர்த்து) ஆகிய நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக மின்வணிகத் தளச் சந்தையின் 98.8 விழுக்காட்டினைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு மின்வணிகத் தளங்கள் வழியாக விற்பனையின் வளர்ச்சிக்கு மானியங்கள், பற்றுச்சீட்டுகள், தள்ளுபடிகள் ஆகியவை பெரிதும் கைகொடுத்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

