உலகளாவிய வர்த்தகப் பின்னடைவுகள் நீடிக்கிறபோதிலும் சிங்கப்பூரின் பொருளியல் தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் வளர்ச்சியடைந்துள்ளதாக முன்னோடி மதிப்பீடுகள் உணர்த்துகின்றன.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் எழுந்துள்ள நிச்சயமற்ற போக்கு ஏற்றுமதி சார்ந்த பொருளியலைப் பதம் பார்க்கக்கூடிய சூழலிலும் சிங்கப்பூரின் வளர்ச்சி தடைபடவில்லை என வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அந்த மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், ஆண்டுக்காண்டு அடிப்படையில் 4.3 விழுக்காடு வளர்ச்சியை சிங்கப்பூர் எட்டியுள்ளதாக மதிப்பீடுகள் குறிப்பிட்டு உள்ளன.
இதற்கு முந்திய காலாண்டில் பதிவான 4.1 விழுக்காட்டில் இருந்து தற்போதைய வளர்ச்சி விரிவடைந்துள்ளது.
குறிப்பாக, இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.5 விழுக்காடாக இருக்கக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்திருந்த முன்னுரைப்பையும் கடந்து வளர்ச்சி பதிவாகி உள்ளது.
மற்றொரு திருப்பமாக, காலாண்டு அடிப்படையிலான வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.
முதலாம் காலாண்டில், அதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் 0.5 விழுக்காடு என வளர்ந்த நிலையில் இரண்டாம் காலாண்டில் அந்த விகிதம் 1.4 விழுக்காடாக விரிவடைந்ததாக அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
முதலாம் காலண்டில் 3.9 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்னும் முன்னுரைப்பு பின்னர் 4.1 விழுக்காடு என மேல் நோக்கித் திருத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஆண்டுக்காண்டு அடிப்படையிலான அரையாண்டு வளர்ச்சி, இரண்டாம் காலாண்டில் 4.2 விழுக்காடு என்னும் சராசரி நிலையை எட்டியுள்ளது.
ஆண்டின் எஞ்சிய காலப் பகுதி குறித்து அமைச்சு குறிப்பிடுகையில், அமெரிக்க வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற போக்கும் உலகப் பொருளியல் இறக்கம் காணும் அபாயங்களும் தென்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இரண்டாம் காலாண்டில், ஆண்டுக்காண்டு அடிப்படையில், உற்பத்தித் துறை 5.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது. முந்திய காலாண்டில் பதிவான 4.4 விழுக்காட்டைக் காட்டிலும் அது வேகமான வளர்ச்சி.
ரசாயனம் மற்றும் பொதுவான உற்பத்திப் பிரிவுகளைத் தவிர்த்து இதர எல்லா உற்பத்திப் பிரிவுகளும் வளர்ச்சி கண்டன.
அதேநேரம் கட்டுமானத் துறை சிறிய இறக்கத்தைச் சந்தித்தது. முந்திய காலாண்டில் 5.1 விழுக்காடு வளர்ச்சி கண்ட அந்தத் துறை, இரண்டாம் காலாண்டில் 4.9 விழுக்காட்டுக்கு இறங்கியது.
சேவைத் துறைகளில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகமும் போக்குவரத்து மற்றும் சரக்கு சேமிப்புத் துறைகளும் ஒட்டுமொத்தமாக 4.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்தன.