சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டில் 4.5 விழுக்காட்டுக்கும் 5.5 விழுக்காட்டுக்கும் இடையில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது, ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்ட 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை என்னும் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிகம்.
ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிங்கப்பூர்ப் பொருளியல் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்ததால் அதற்கேற்ற வகையில் முன்னுரைப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதற்கு முன்னர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தனது முன்னுரைப்புக்குப் பின்னர், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வளர்ச்சி எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டதாக அந்த அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உற்பத்தி, ஏற்றுமதிகளுக்குக் குறிப்பிடத்தக்க ஊக்கமும் கிடைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், சிங்கப்பூரின் பொருளியல் முந்தைய காலாண்டின் 6.3 விழுக்காட்டு வளர்ச்சியிலிருந்து குறைந்து, ஆண்டுக்காண்டு அடிப்படையில் 5.9 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
பருவத்திற்கேற்ப சரிசெய்யப்படும், காலாண்டு அடிப்படையிலான பொருளியல் 1.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இது முதலாவது காலாண்டில் எட்டிய 1.2 விழுக்காட்டைப் பின்பற்றி வளர்ச்சியைத் தொடர்கிறது.
இந்த ஆண்டின் முதல் பாதியில், ஜிடிபி எனப்படும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் ஜிடிபி வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை, மொத்த வியாபாரம், நிதி, காப்புறுதித் துறைகளின் வலுவான செயல்திறன் முக்கியக் காரணமாக அமைந்தது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகளாவிய வலுவான தேவை காரணமாக, உற்பத்தித் துறையின் மின்னணுவியல், துல்லியப் பொறியியல் பிரிவுகள் வளர்ச்சி கண்டன.
மேலும், மொத்த வியாபாரத் துறையின் இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் விநியோகப் பிரிவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவுசெய்தன.
கடந்த மே மாதம் வர்த்தக, தொழில் அமைச்சு முதலாம் காலாண்டின் வலுவான வளர்ச்சியைக் சுட்டிக்காட்டியபோதிலும் மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்படக்கூடிய பாதகமான அபாயங்களையும் குறிப்பிட்டிருந்தது.


