சிங்கப்பூரின் ஏற்றுமதி 16 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என முன்னுரைப்பு

சிங்கப்பூரின் ஏற்றுமதி 16 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என முன்னுரைப்பு

2 mins read
eec3bde6-f89f-47bf-a121-06b3f39c453e
ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 18.6 விழுக்காடு வளர்ச்சி கண்டு வியப்பளித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி இவ்வாண்டு அதிக வளர்ச்சி காணும் என்று சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது.

இரண்டாம் காலாண்டில் 27.4 விழுக்காடு வளர்ச்சி பதிவானதைத் தொடர்ந்து ஆண்டு முழுமைக்குமான கணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு விரிவாக்கத்தால் மின்னணுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்ததால் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிக வளர்ச்சி பதிவானது.

அந்த வளர்ச்சி விகிதம் முதலாம் காலாண்டில் 9.6 விழுக்காடாக இருந்தது என என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்தது.

வளர்ச்சி விகிதம் ஏறுமுகத்தில் பதிவானதன் அடிப்படையில் இவ்வாண்டில் ஏற்றுமதி 14 விழுக்காடு முதல் 16 விழுக்காடு வரை வளர்ச்சி காணலாம் என அந்த அரசாங்க அமைப்பு எதிர்பார்க்கிறது.

மின்னணுப் பொருள்களின் துணையுடன் ஆண்டின் முதலாம் பாதியில் ஏற்பட்ட வலுவான செயல்பாட்டை அந்தக் கணிப்பு பிரதிபலிக்கிறது.

இதற்கு முன்னர் அந்த வளர்ச்சி விகிதம் 3 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரையிலேயே இருக்கும் என அது கணித்திருந்தது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 18.6 விழுக்காடு வளர்ச்சி கண்டு வியப்பளித்தது.

இது, 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அசுர வளர்ச்சி என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியிருந்தது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 57.8 விழுக்காட்டு வளர்ச்சியை, எண்ணெய் சாரா ஏற்றுமதி பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி, அதாவது இரண்டாம் காலாண்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சாதனை அளவாக 88.1 விழுக்காடு அதிகரித்தது.

மின்னணுப் பிரிவில், பகுதி மின்கடத்தி போன்ற தொழில்நுட்பச் சாதனங்களின் ஏற்றுமதி 91.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஏற்றுமதிவளர்ச்சிமுன்னுரைப்பு