அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உயர் அளவிலான வரி விதிப்பிலிருந்து தப்பிக்க என்றுமில்லாத வகையில் சிங்கப்பூரும் ஆசியான் நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கை முடிவுறும் தருணம் நெருக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க இறக்குமதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது இனி வரும் காலத்தின் நிலவரத்தை எடுத்துக்காட்டுவதாகப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, இவ்வாண்டு பிற்பாதியில் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி வீழ்ச்சி ஈரிலக்க விகிதத்தைத் தொடும் என்று ஜப்பானிய முதலீட்டு நிறுவனமான நோமுரா வங்கி கூறுகிறது.
ஆசியான் நாடுகளின் உற்பத்தித் துறை சீர்குலைந்து வரும் நிலையில், சிறிய, திறந்த சந்தைப் பொருளியல் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் போன்றவை பொருளியல் வளர்ச்சியில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா - சீனா இடையே பிரிட்டனில் ஜூன் 9ஆம் தேதி தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் அனைவரும் நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், அது 50 விழுக்காடு வரி விதிப்பை எதிர்நோக்கியிருக்கும் மற்ற நாடுகள் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தை இதுபோலவே வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கையைத் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும், வரி விதிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுக்குப் பின் முரணான செயல்பாடு வருங்காலத்தில் இந்தப் பிரச்சினையில் கொள்கை மாற்றம் மீண்டும் வரலாம் என்ற அச்சம் நிலவுவதாக பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, எஃகு, அலுமினிய வரியை 50 விழுக்காடாக டிரம்ப் உயர்த்தியுள்ளதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது பிரிட்டிஷ் உலோகப் பொருள்களுக்கு வரி விதிப்பு இல்லை என்ற ஒப்பந்தத்தைப் பாதித்ததை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

