சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி (NODX) மார்ச் மாதம் 15.3 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
பிப்ரவரியில் பதிவான 4 விழுக்காட்டைக் காட்டிலும் இது சிறப்பான வளர்ச்சியாகும். அத்துடன், மார்ச் மாத ஏற்றுமதி 8.1 விழுக்காட்டைத் தொடும் என்னும் புளூம்பெர்க்கின் கணிப்பையும் அது மிஞ்சிவிட்டது.
பிப்ரவரி இறுதியில் ஈரான் போர் தொடங்கியபோதிலும், ஏற்றுமதி வளர்ச்சி தடையின்றி தொடர்ந்தது. அந்த வகையில் இது ஏழாவது மாதத் தொடர் ஏற்றம்.
செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கு நீடிக்கும் வலுவான தேவை மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் உயர்ந்தது.
ஆண்டு அடிப்படையில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 74 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் ஏற்றுமதி 9.6 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் ஜனவரி மாத ஏற்றுமதியுடன் இறக்குமதியும் அதிகரித்ததால் மொத்த வர்த்தகம் 38.5 விழுக்காடு விரிவடைந்தது.
மின்னணு சாரா ஏற்றுமதி 0.6 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. ஆயினும், பிப்ரவரியுடன் ஒப்புநோக்க இது ஒரு சிறிய இறக்கம்தான். பிப்ரவரியில் மின்னணு தொடர்பில்லாத பொருள்களின் ஏற்றுமதி 6.9 விழுக்காடு வீழ்ச்சி கண்டிருந்தது.

