அக்டோபரில் சற்றே மந்தமாயின சிங்கப்பூரின் தொழிற்சாலைச் செயல்பாடுகள்

அக்டோபரில் சற்றே மந்தமாயின சிங்கப்பூரின் தொழிற்சாலைச் செயல்பாடுகள்

படம்: சாவ்பாவ்

03 Nov 2026 - 12:11 pm

2 mins read

சிங்கப்பூரின் அக்டோபர் மாதத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் புதிய முன்பதிவுகளில் ஏற்பட்ட சிறிய சரிவு உள்ளிட்ட காரணங்களால் அதன் வேகம் மந்தமாகவே பதிவாகியுள்ளது.

உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த நிலையை அளவிடும் குறியீடான சிங்கப்பூரின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு, செப்டம்பரில் பதிவான 51.7 புள்ளிகளிலிருந்து அக்டோபரில் 51.4 புள்ளிகளாகக் குறைந்தது.

சிங்கப்பூரின் உற்பத்தி வெளியீட்டில் 40 விழுக்காட்டுப் பங்களிப்பைக் கொண்டுள்ள மின்னணுவியல் துறை, 52.5 புள்ளிகளைப் பதிவு செய்தது. அது முந்தைய மாதத்தில் பதிவான 52.9 புள்ளிகளைவிடக் குறைவு.

50க்கு மேற்பட்ட சிங்கப்பூரின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு அளவு வளர்ச்சியையும், அதற்குக் குறைவான அளவு சரிவையும் குறிக்கிறது.

அது தொடர்ந்து வளர்ச்சி கண்டாலும் சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு அளவில் கடந்த ஏழு மாதங்களில் முதன்முறையாக இறங்கியுள்ளது; மின்னணுவியல் துறையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு குறியீடு முதல் சரிவைச் சந்தித்துள்ளது என்று ஓசிபிசியின் தலைமைப் பொருளியல் நிபுணர் செலினா லிங் கூறினார்.

“வளர்ச்சியின் வேகம் சற்று மெதுவடைந்ததே தவிர, அது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த மூலதனச் செலவினங்களின் வளர்ச்சியில் உடனடியாகவோ முழுமையாகவோ வீழ்ச்சி ஏற்படப்போகிறது என்பதற்கான அறிகுறி அன்று,” என்றார் அவர்.

அதே வேளையில், மூலப்பொருள் விலை சற்றே விரைவான வளர்ச்சியைக் கண்டது.

தயாரிக்கப்பட்ட பொருள்களின் கையிருப்பின் சரிவு குறைவாக இருந்தது.

விநியோகிப்பாளர்களின் விநியோகக் குறியீடு மிகவும் மெதுவான விகிதத்தில் சுருங்கியது. அது விநியோகம் தாமதாகும் சம்பவங்கள் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

அந்த மாதாந்தரக் கணக்கெடுப்பைத் தயாரிக்கும் சிங்கப்பூர் கொள்முதல், பொருள்கள் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீபன் போ, “இந்தக் குறியீடுகள் உற்பத்தித் துறை உயர்நிலையிலிருந்து சற்றே தணிந்து வருவதைக் காட்டுகிறதே தவிர, வேகத்தை இழக்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

“வலுவான ஏற்றுமதிகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்பதிவுகள், நிலுவையில் உள்ள அதிகப்படியான பணி ஆணைகள் ஆகியவை, உற்பத்தி வளர்ச்சியின் சிறப்புத் தூணாக மின்னணுவியல் துறை தொடர்ந்து நிலைத்திருக்க உதவுகின்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்