வனவிலங்குப் பிரியர்கள் சிங்கப்பூரில் முதன்முறையாக உலகின் ஆக அரியவகை குரங்குகளை விரைவில் காணலாம். 2025 மார்ச்சில் திறக்கப்படும் ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ எனும் வனவிலங்குப் பூங்காவில் இது சாத்தியம்.
சீனாவுக்கும் வியட்னாமுக்கும் சொந்தமான Francois langur எனும் இந்தக் குரங்கு, அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2024 பிபிசி தகவலின்படி, இவ்வகை குரங்குகளில் வனப்பகுதிகளில் ஏறக்குறைய 2,000 உயிரினங்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், சிங்கப்பூரில் இவ்வகை குரங்குகளுக்கு இருப்பிடமாக ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ திகழும் என மண்டாய் வனவிலங்குக் குழுமம் வியாழக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தது. அத்துடன், அருகிவரும் பிலிப்பீன்ஸ் புள்ளி மான் உள்ளிட்ட 29 வகை உயிரினங்கள் இந்த வனவிலங்குப் பூங்காவில் காணப்படும்.
மண்டாயின் இந்த ஐந்தாவது வனவிலங்குப் பூங்காவில் 7,000 தென்கிழக்காசிய மரங்களும் புதர்களும் இருக்கும்.
ஆசியாவிலேயே சாகசம் நிறைந்த முதல் விலங்கியல் தோட்டமாக இப்பூங்கா இருக்கும்.
ஏறத்தாழ 32 காற்பந்துத் திடல்களின் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்காவில் புலிகள், தும்பிப்பன்றிகள் (tapirs), சூரியக் கரடிகள் (sun bears) வசிப்பிடங்களில் சுற்றித் திரியும்.
இந்தப் பூங்காவில் உள்ள 10 மண்டலங்கள், வருகையாளர்களுக்கு வெவ்வேறு அளவிலான சாகச அனுபவங்களை வழங்கும் என மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாகி மைக் பார்க்லே தெரிவித்தார்.
இந்தப் பூங்கா ஒருபுறமிருக்க, ‘மண்டாய் ரெயின்ஃபாரஸ்ட் ரிசார்ட்’ எனும் உல்லாசத் தலமும் 2025 முற்பாதியில் திறக்கப்படும்.
அடுத்தகட்ட முயற்சிகளில் ஒரு பகுதியாக, வரும் ஆண்டுகளில் ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆப்பிரிக்கா’ பூங்கா திறக்கப்படும் என மண்டாய் கூறியது.