நவீன சிங்கப்பூரின் நிலத் தோற்றத்தை வடிவமைத்த பெருமைக்குரியவரான கட்டடக்கலை வல்லுநர் லியு தாய் கெர் காலமானார். அவருக்கு வயது 87.
டாக்டர் லியுவின் மறைவை அவரது மகன் டேனியல் லியு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தினார். ஒரு வாரத்துக்கு முன்பு கீழே விழுந்ததை அடுத்து தமது தந்தையின் உடல்நலத்தில் சிக்கல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை டாக்டர் லியுவின் உயிர் பிரிந்தபோது குடும்பத்தினரும் உறவினர்களும் அருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் (பிப்ரவரி) அவருக்கு 88 வயது நிறைவடைந்திருக்கும்.
சிங்கப்பூரின் முதல் பெருந்திட்ட வடிவமைப்பாளரான டாக்டர் லியு, நகர்ப்புறத் திட்டமிடலின் தந்தை என்றும் பாராட்டப்படுபவர்.
இங்குள்ள ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பொது வீடமைப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏறத்தாழ பாதிக் குடியிருப்புகளின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டவர். வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நகர்ப்பகுதிகள் 24ல் 20ன் திட்டமிடலுக்கு உதவியவர் அவர்.
1969ஆம் ஆண்டு, கழகத்தின் வடிவமைப்பு, ஆய்வுப் பிரிவின் தலைவராக டாக்டர் லியு பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு 1989ல் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாகி, திட்ட வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றார்.
1992ல் பொதுச் சேவையிலிருந்து விலகிய அவர், 50க்கும் மேற்பட்ட நகரங்களை வடிவமைத்ததுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம் போன்ற குறிப்பிடத்தக்க திட்டங்களையும் வடிவமைத்தார்.
பின்னர் 2017ஆம் ஆண்டில் தமது 79வது வயதில் ‘மாரோ ஆர்க்கிடெக்ட்ஸ் அண்ட் பிளேனர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூரின் மூவாரில் 1938ஆம் ஆண்டு பிறந்த அவர், ஆறு வயதுச் சிறுவனாக 1944ல் சிங்கப்பூருக்கு வந்தார். உபகாரச் சம்பளத்துடன் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் நகர்ப்புறத் திட்டமிடலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
தமது தந்தை இரண்டாம் உலகப் போர், ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கடந்து வந்தவர் என்பதையும் சிங்கப்பூரின் கட்டட உருவாக்கத்தில் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார் திரு டேனியல் லியு.

