தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் முதல் எம்ஆர்டி ரயில்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு

2 mins read
fce93873-eceb-4247-a086-d1ad5f236998
முதல் தலைமுறை கவாசாக்கி ஹெவி இண்டஸ்டிரிசின் ரயில்கள் 1987 நவம்பரில் 7ஆம் தேதி சேவையில் சேர்க்கப்பட்டன. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு தடங்களில் சேவையாற்றிய முதல் தலைமுறையைச் சேர்ந்த அனைத்து எம்ஆர்டி ரயில்கள் சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 26ஆம் தேதியன்று முதல் தலைமுறை 66 ரயில்கள் கடைசியாக இயக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த 38 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளன.

கவாசாக்கி ஹெவி இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் முதல் தலைமுறை ரயில்கள் 1987 நவம்பர் 7ஆம் தேதி சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

முன்னதாக அத்தகைய ரயில்கள் 2026ஆம் ஆண்டின் இறுதியில் அகற்றப்பட்டு 7ஆம் தலைமுறை ‘அல்ஸ்டாம் மோவியா ஆர்151’ ரயில்களின் சேவையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 2024 செப்டம்பரில் முதல் தலைமுறையைச் சேர்ந்த ரயில் ஒன்றின் முக்கிய அச்சாணிப் பெட்டி பழுதடைந்ததால் கிழக்கு-மேற்கு தடத்தில் ஆறு நாள்கள் சேவை பாதிக்கப்பட்டது. இது, சிங்கப்பூர் ரயில் சேவை வரலாற்றில் இல்லாத ஆக மோசமான இடையூறாக அமைந்தது.

இதனால் ரயில் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் 2.4 மில்லியன் வெள்ளி அபராதம் விதித்தது.

ஏழாவது தலைமுறையின் முதல் சில ரயில்கள் ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சேவையில் சேர்க்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 18ஆம் தேதி வரை இத்தகைய 106 ரயில்களில் எழுபது ரயில்கள் சேவையில் இருந்தன.

எஸ்எம்ஆர்டியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு ஒன்பது ரயில்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன. எஞ்சிய 27 ‘ஆர்151’ ரயில்கள் 2026ஆம் ஆண்டில் எஸ்எம்ஆர்டியிடம் ஒப்படைக்கப்படும்.

சில ஏழாம் தலைமுறை ‘ஆர்151’ ரயில்கள் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை ரயில்களுக்கு மாற்றாகவும் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்