சிங்கப்பூரின் முதல் தனியார் ‘ஆதரவுடன் வாழ்க்கை’ (அசிஸ்டெட் லிவிங்) வீடமைப்புத் திட்டம் 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் திறக்கப்படும்.
பெரெனியல் லிவிங் (Perennial Living) எனும் இத்திட்டம் 260 மில்லியன் வெள்ளி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் மூத்தோருக்கான பராமரிப்பு அம்சங்களை மேம்படுத்துவது இலக்காகும்.
தரைவீடுகள் அமைந்திருக்கும் ரோசைத் எஸ்டேட் வட்டாரத்தில் உள்ள 28 பேரி அவென்யூவில் பெரெனியல் லிவிங் வீடுகள் இருக்கின்றன. இது, விருந்துபசரிப்பு, மருத்துவப் பராமரிப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கும் ‘ஆதரவுடன் வாழ்க்கை’ வீடமைப்புத் திட்டமாகும்.
இந்த வீடுகளில் வசிக்கத் தகுதிபெற குடியிருப்பாளர்களுக்குக் குறைந்தபட்சம் 65 வயதாகியிருக்கவேண்டும். மேலும், அவர்கள் இத்திட்டத்தில் உள்ள வீட்டில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வசிக்கவேண்டும்.
திட்டத்தில் அமைந்துள்ள தாதிமை இல்லத்தில் வசிப்பதற்குக் காலக் கட்டுப்பாடுகள் கிடையாது.
பெரெனியல் லிவிங் திட்டத்தில் பணியாற்ற 180க்கும் அதிகமான ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் பரப்பளவு 195,000 சதுர அடிகள். இதில் 200 அடுக்குமாடி வீடுகளும் 100 தாதிமை இல்லப் படுக்கைகளும் உள்ளன. திட்டத்தில் 1.5 ஹெக்டர் பரப்பளவு சிகிச்சைப் பூங்காவும் (therapeutic park) அமைந்துள்ளது.
இந்த தனியார் ‘ஆதரவுடன் வாழ்க்கை’ வீடமைப்புத் திட்டத்தில் ஸ்டுடியோ, ஓரறை, ஈரறை வீடுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் 302லிருந்து 593 சதுர அடிகளுக்கு இடைப்பட்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
அடிப்படை வசிப்புத் திட்டத்தின்கீழ் இவற்றுக்கான மாதக் கட்டணம் 8,900லிருந்து 17,000 வெள்ளிக்கு இடைப்படும். வீட்டின் வடிவம், அமைந்துள்ள கட்டடத்தின் தளம் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்றவாறு விலை அமையும்.
முதலில் விண்ணப்பிப்போருக்கு மாதக் கட்டணத்தில் கணிசமான அளவு விலைக் கழிவு வழங்கப்படும்.

