ரவி சிங்காரம்
இவ்வாண்டு முதன்முறையாக நடக்கும் காமன்வெல்த் கபடிப் போட்டிகளில் சிங்கப்பூரின் ஆண்கள் அணி அதன் முதல் வெற்றியைத் தழுவியுள்ளது.
சனிக்கிழமை (அக்டோபர் 24) ஸ்காட்லாந்துக்கு எதிராக 50-28 என்ற புள்ளிக்கணக்கில் சிங்கப்பூர் வெற்றிபெற்றது.
முகமது ஐடில் அஷ்ராஃப், சிறந்த முன்னிலை ஆட்டக்காரர் என்ற விருதைப் பெற்று 10,000 ரூபாய் காசோலையைப் பெற்றார்.
“இது குழு வெற்றி. இறுதியில் நான் சற்று தளர்ந்தபோது என் அணியினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் என் குழுவினருடன் உயர்ந்த இலக்கை எட்ட விரும்புகிறேன்,” என்றார் ஐடில்.
அணித் தலைவர் வி.விஷ்வ தேவா தற்காப்பு ஆட்டத்தில் ஐந்து புள்ளிகள் பெற்று ‘ஹை ஃபை’ எனச் சாதனைப் படைத்தார்.
“நாங்கள் எதிரணியை நன்கு ஆராய்ந்துத் திட்டமிட்டோம். முதல் பாதியில் நாங்கள் பெரிய புள்ளி வித்தியாசத்தைக் குவித்து, இரண்டாம் பாதியில் அதைத் தக்கவைத்தோம். என் அணியினர் ஒன்றிணைந்து தற்காத்ததால்தான் என்னால் ஐந்து புள்ளிகள் பெறமுடிந்தது,” என்றார் விஷ்வ தேவா.
ஒரே தாக்குதலில் நால்வரைத் தொட்டு ‘சூப்பர் ரெய்ட்’ எனும் சாதனையைப் படைத்தார் ராகுல் சங்கர், 20. “அது என் இரண்டாவது தாக்குதல்தான்; அதனால் எதிரணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் எங்கு நிற்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை; அவர்களின் பாதியில் சற்று அதிகமாகவே சென்றுவிட்டேன். அவர்கள் என்மீது பாய, நால்வரைத் தொட்டுத் திரும்பினேன்,” என்றார் ராகுல்.
விரைவாக முன்னேறும் இளம் விளையாட்டாளர் ஆதித் செந்தில்குமார், 19, பங்கேற்கும் முதல் அனைத்துலகக் கபடிப் போட்டி இதுவே. அவர் விளையாடிய இருமுறையும் சிறப்பாகச் செய்தார். “அணியின் திட்டத்துக்கு ஏற்றவாறு, புள்ளிகளைத் தக்கவைக்க சற்று பாதுகாப்பாகவே ஆடினேன். தற்காப்பு ஆட்டத்தில் கிஷோர் பலமுறை எங்களைக் காப்பாற்றினார். அணித் தலைவர் விஷ்வ தேவா பல தாக்குதல்களை முறியடித்தார்,” என்றார் ஆதித்.
முதல் ஆட்டத்தில் கென்யாவிடம் 48-28 எனத் தோல்வியுற்ற சிங்கப்பூர் ஆண்கள் அணிக்கு இவ்வெற்றி புத்துணர்ச்சியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், கனடா ஆகிய அணிகளைச் சந்திக்கும். பங்ளாதேஷ்தான் ஆகக் கடினமான போட்டியாக இருக்கும் எனக் கணிக்கிறார் விஷ்வ தேவா.
சிங்கப்பூர் பெண்கள் அணி தன் முதல் ஆட்டத்தில் உகாண்டாவிடம் தோற்றது. தொடர்ந்து, இந்தியா, நைஜீரியா, மலேசியா ஆகிய அணிகளைச் சந்திக்கும்.
சிறப்பாகச் செய்யும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
2030ல் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, அகமதாபாத்தில்தான் இந்த கபடிப் போட்டியும், அக்டோபர் 23 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
“இப்போட்டியில் கலந்துகொள்வது எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு. போட்டியில் சிறப்பாகச் செய்தால் அனைத்துலக மேடையில் இன்னும் அதிக போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார் சிங்கப்பூர் கபடி பெண்கள் அணிப் பயிற்றுவிப்பாளரும் மத்திய சிங்கப்பூர் கபடிச் சங்கத் தலைவருமான சிவநேசன்.
விளையாட்டுகளை https://www.youtube.com/live/9OM4acrUq7k?is=qc6LT8qv6R0V8mQA இணையத்தளத்தில் காணலாம்.
