$1.3 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை ஜிஐசி விற்க உள்ளதாகத் தகவல்

2 mins read
176404cf-63e8-4cf4-9276-8032b62ac678
ஜிஐசி நிறுவனம் குறைந்தது $1.3 பில்லியன் நிகர சொத்து மதிப்புகொண்ட பங்குகளை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசி, அதன் தனியார் பங்கு நிதிகளில் குறைந்தது $1.3 பில்லியன் நிகர சொத்து மதிப்புகொண்ட பங்குகளை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

இது, பிளாக்ஸ்டோன், அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட், டிடிஆர் கேபிட்டல் உள்ளிட்ட உலகளாவிய 30க்கும் மேற்பட்ட தனியார் பங்குகளை உள்ளடக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

இந்தப் பங்குகளில் ஜிஐசி சராசரி யுஎஸ் $100 மில்லியன் முதலீடு செய்துள்ளது என்றும் அவற்றின் முதலீடு கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு தொடங்கியது என்றும் தகவல்கள் சுட்டுகின்றன.

எனினும் இதுகுறித்து ஜிஐசி, பிளாக்ஸ்டோன், அப்போலோ, டிடிஆர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

இவ்வாண்டின் முதல் அரையாண்டில் தனியார் பங்குகளை விற்பதற்குத் தடையாக இருக்கும் மந்தமான சந்தை நிலைமை, நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் சில பகுதிகளை இரண்டாம் நிலை சந்தைகளுக்கு மாற்றத் தூண்டியுள்ளதாக ஜெஃபரிஸ் நிதிக் குழுவின் அறிக்கை சுட்டியது.

அந்த அறிக்கையின்படி, தனியார் சந்தைகளுக்கான இரண்டாம் நிலை பரிவர்த்தனை அளவு ஆண்டின் முதல் பாதியில் யுஎஸ் $103 பில்லியனை எட்டியது. அத்தகைய விற்பனை, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைச் சமன் செய்யவும், புதிய நிதிகளில் மறுமுதலீடு செய்யவும் வாய்ப்பை வழங்குகிறது.

ஜிஐசி விற்பனையின் நிதிகளின் எண்ணிக்கை, தொகுப்புகளின் இறுதி மதிப்பு உள்ளிட்டவற்றில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தகுந்த விலை கிடைக்கவில்லை என்றால் ஜிஐசி அதன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்யவும் கூடும் என்றும் தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய விற்பனை ஜிஐசியின் வழக்கமான சந்தை நடைமுறை என்று புரிந்துகொள்ளப்படுகிறது. இது இரண்டாம் நிலை பங்குகளை வாங்குவதில் முக்கியப் பங்காளியாகவும் உள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட 50 பங்குகளில் அது முதலீடு செய்தது.

ஜிஐசி அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள தனது சொத்துகளை விளம்பரப்படுத்துவதில்லை. எனினும், தரவுத் தளமான ‘குளோபல் எஸ்டபிள்யுஎஃப்’ (Global SWF) அது கிட்டத்தட்ட யுஎஸ் $936 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிப்பதாக மதிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்