சிங்கப்பூர் நாணய ஆணையம் பொருளியல் நிபுணர்களுக்கு இடையே நடத்திய ஆய்வில் இவ்வாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 2.3 விழுக்காட்டிலிருந்து 3.6 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கக்கூடிய சூழலில் அரசாங்கம் பொருளியல் வளர்ச்சிக்கான அதன் முன்னுரைப்பை தக்கவைத்துள்ளது என்று இது குறித்து கருத்துரைத்த துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான கான் கிம் யோங் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தி, மொத்த, சில்லறை விற்பனைத்துறைகளில் முன்னேற்றம் காணப்படுவதால், தனியார் துறைகளைச் சேர்ந்த பொருளியல் வல்லுநர்கள் இந்த வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2.3 விழுக்காடு பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தனர். தற்போதைய முன்னுரைப்பு அரசாங்கம் குறிப்பிட்டிருந்த 2 முதல் 4 விழுக்காட்டு வளர்ச்சியைச் சார்ந்துள்ளது.
நிபுணத்துவம் பெற்ற முன்னுரைப்பாளர்களின் காலாண்டு கணிப்புக்கான அழைப்பை சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த பிப்ரவரி 10 அன்று விடுத்திருந்தது.
அவர்கள் வழங்கிய கணிப்புகள், கடந்த பிப்ரவரி 20ல் அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்த 10 விழுக்காட்டு வரியைக் கருத்தில் கொண்டு தரப்பட்டதா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. ஒருசில நாடுகளுக்கு அந்த வரிகளை 15 விழுக்காட்டுக்குக் கூட்டும் வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்கா மிரட்டிவருகிறது.
எண்ணெய் சாரா ஏற்றுமதிகளின் முன்னுரைப்பு விகிதம் 2 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கும் வசதி, உணவு சேவைகளுக்கான விகிதம் 1.6 விழுக்காட்டிலிருந்து 1.3 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
அதே பொருளியல் நிபுணர்கள் 2027ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 2.5 விழுக்காடு என்று கணித்துள்ளனர்.

