அமெரிக்க வரிகளால் சிங்கப்பூரின் வளர்ச்சி பாதிக்கப்படும்: பிரதமர் வோங்

3 mins read
14b831df-3a27-4b5f-8373-ee196e8461ab
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அமெரிக்கா விதித்துள்ள அண்மைய வரிகள் சிங்கப்பூர்ப் பொருளியலையும் நிறுவனங்களையும் ஊழியர்களையும் பாதிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் இவ்வாண்டு மந்தநிலையை எதிர்கொள்ளலாம் அல்லது எதிர்கொள்ளாமலும் போகலாம். ஆனாலும், நமது வளர்ச்சி கணிசமான அளவிற்குப் பாதிக்கப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை,” என்று திரு வோங் கூறியுள்ளார்.

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் குறுகிய காலத்திற்கு ஆதரவு வழங்கும் என்ற அவர், அரசாங்கம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும் என்றும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய பணிக்குழு உதவும் என்றும் சொன்னார்.

ஆயினும், கூடிய விரைவில் உலகளாவிய வளர்ச்சி குன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதனால் வெளிச்சந்தைகளில் சிங்கப்பூர்ப் பொருள்களுக்கும் சேவைகளுக்குமான தேவை குறையும் என்றும் நிதி[Ϟ]யமைச்சருமான திரு வோங் குறிப்பிட்டார்.

குறிப்பாக, உற்பத்தி, மொத்த வணிகம், போக்குவரத்து ஆகிய துறைகள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

இம்மாதம் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம் நாடு இறக்குமதி செய்யும் பொருள்களுக்குப் புதிய வரிகளை அறிவித்தார். அதன்படி, சிங்கப்பூருக்கும் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஏப்ரல் 9) முதல் அது நடப்பிற்கு வரவுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதுகுறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை பிரதமர் வோங் வாசித்தார்.

“வளர்ச்சி மெதுவடையும்போது வேலைவாய்ப்புகளும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வும் குறையும். பல நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டால் அல்லது தங்களது செயல்பாடுகளை அமெரிக்காவிற்கே மாற்றிக்கொண்டால், ஆட்குறைப்பும் வேலையிழப்பும் அதிகமாகலாம்,” என்றார் திரு வோங்.

இவ்வாண்டில் சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சி 1 முதல் 3 விழுக்காட்டிற்குள் இருக்கும் என வர்த்தக, தொழில் அமைச்சு முன்னதாகக் கணித்திருந்தது. அதனை அமைச்சு மறுமதிப்பீடு செய்யும் என்றும் பெரும்பாலும் இறங்குமுகத்தில் இருக்கலாம் என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

அரசாங்கம் நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க தயார்நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான புதிய பணிக்குழு, நிறுவனங்களின், ஊழியர்களின் உடனடிக் கவலைகளைத் தீர்க்கவும், அவற்றின் மீள்திறனை வலுப்படுத்தவும், புதிய பொருளியல் சூழலுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ளவும் உதவும் என்று திரு வோங் கூறியுள்ளார்.

“தன்னைப்பேணித்தனத்தைப் பின்பற்ற அமெரிக்கா முடிவுசெய்திருக்கலாம். ஆனால், மற்ற உலக நாடுகளும் அதே வழியைப் பின்பற்றத் தேவையில்லை,” என்றார் அவர்.

இம்மாதம் 4ஆம் தேதி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடனும் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மருடனும் அவர் பேசினார். வரும் நாள்களிலும் பல நாட்டுத் தலைவர்களுடன் அவர் பேசவிருக்கிறார்.

“அவர்கள் அனைவரும் சிங்கப்பூருடன் இன்னும் அதிகமாக இணைந்து செயல்படவும் பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஆர்வமாக உள்ளனர். மின்னிலக்க, பசுமைப் பொருளியல் போன்ற துறைகளும் அதில் அடங்கும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

மேலும், “சிங்கப்பூர்-அமெரிக்கா இடையே நீண்டகால, ஆழமான நட்பு இருந்துவரும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இவை நண்பரிடத்தில் ஒருவர் செய்யும் செயல்கள் அல்ல,” என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் - அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க இறக்குமதிகளுக்குச் சிங்கப்பூர் வரிவிதிப்பதில்லை. உண்மையில், வணிகப் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது, சிங்கப்பூரிடமிருந்து அமெரிக்கா வாங்குவதைவிட, சிங்கப்பூர் அமெரிக்காவிடமிருந்து அதிகம் வாங்குகிறது.

குறிப்புச் சொற்கள்