சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் ஜனவரியில் 9.3% ஏற்றம்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் ஜனவரியில் 9.3% ஏற்றம்

2 mins read
செயற்கை நுண்ணறிவுத் தேவையால் மின்னணுத் துறை வளர்ச்சி
1713d89d-fab7-4051-b5b2-949e34ef4fda
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் 9.3 விழுக்காடு அதிகரித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் ஜனவரியில் மேலும் வளர்ச்சி கண்டுள்ளன.

எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கட்கிழமை (பிப்ரவரி 16) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் ஜனவரியில் 9.3 விழுக்காடு அதிகரித்தன. இது, கடந்த டிசம்பரில் பதிவான 6.1 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அதிகம்.

இருப்பினும், புளூம்பெர்க் ஆய்வாளர்கள் கணித்திருந்த 13.5 விழுக்காட்டு வளர்ச்சியைவிட இது சற்றே குறைவு.

மின்னணுத் துறை வளர்ச்சி

2025 ஜனவரியில் சீனப் புத்தாண்டு வந்ததால் ஏற்பட்ட குறைந்த அடிப்படை நிலையுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரியில் மின்னணு ஏற்றுமதிகள் 56.1 விழுக்காடு உயர்ந்தன. அந்த மாதம் மின்னணு ஏற்றுமதிகளின் மதிப்பு $3.1 பில்லியனாக இருந்தது. இது, 2025ன் சராசரி மாத ஏற்றுமதி மதிப்பை விடக் குறைவு.

ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated circuits) ஏற்றுமதிகள் ஆக அதிகமாக 80.5 விழுக்காடு கூடின. வட்டு ஊடகப் பொருள்களின் ஏற்றுமதிகள் 70.2 விழுக்காட்டு உயர்வையும் தனிநபர் கணினியின் ஏற்றுமதிகள் 24 விழுக்காட்டு உயர்வையும் பெற்றன.

மின்னணு சாரா ஏற்றுமதி சரிவு

மின்னணு அல்லாத இதர பொருள்களின் ஏற்றுமதிகள் ஜனவரியில் 3 விழுக்காடு சரிந்தன. இது, டிசம்பரில் 0.8 விழுக்காட்டு உயர்வைக் கண்டிருந்தது. குறிப்பாக, பிரத்தியேக இயந்திரங்கள், உணவுத் தயாரிப்புகள், பெட்ரோலிய வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகள் சரிவைச் சந்தித்தன.

சந்தை நிலவரம்

நாடுகளின் அடிப்படையில் பார்க்கையில், சீனா, ஹாங்காங், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்தன. மாறாக, இந்தோனீசியாவுக்கும் அமெரிக்காவுக்குமான ஏற்றுமதிகள் குறைந்தன.

தாய்லாந்துக்கான மின்னணு அல்லாத ஏற்றுமதிகள் 67.6 விழுக்காடு அதிகரித்தன. அதேபோல, யூரோ மண்டலத்திற்கான ஏற்றுமதிகள் 47.6 விழுக்காடு கூடின.

உலகப் பொருளியல் சூழல் மேம்பட்டு வருவதாலும், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரிப்பதாலும், 2026க்கான ஏற்றுமதிக் கணிப்பை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கடந்த வாரம் உயர்த்தியிருந்தது.

இதன்படி, 2026ல் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் 2 விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பரில், இந்த வளர்ச்சி 0 விழுக்காடு முதல் 2 விழுக்காடாகக் கணிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்