சிங்கப்பூரின் ஊழியர் சந்தை 2025ல் விரிவடைந்தது: மனிதவள அமைச்சு

சிங்கப்பூரின் ஊழியர் சந்தை 2025ல் விரிவடைந்தது: மனிதவள அமைச்சு

2 mins read
நான்காம் காலாண்டில் ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
7f0004b4-3cd8-487f-9c38-c748d8582cd3
நிறுவனங்கள் இவ்வாண்டின் (2026) முதல் காலாண்டில் ஆள் எடுப்பதில் தொடர்ந்து கவனத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஊழியர் சந்தை கடந்த ஆண்டில் (2025) தொடர்ந்து விரிவடைந்தது.

பொருளியல் வலுவாக இருந்ததும் தேவை நீடித்ததும் அதற்குக் காரணங்கள். இருப்பினும் உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழலால் சிங்கப்பூரின் ஊழியர் சந்தை இவ்வாண்டு அதிக ஆபத்துகளை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.

2025இன் இறுதிக் காலாண்டில் வேலைச் சந்தையும் அதிகச் சவால்களைச் சந்திக்க நேரிட்டது. காலாண்டு அடிப்படையிலான ஆட்குறைப்பு விகிதம் கூடியிருந்தது. ஆண்டு அடிப்படையில் நிரப்பப்படாமல் இருந்த வேலைகளின் விகிதம் குறைந்திருந்தது.

சென்ற ஆண்டு முழுமைக்கும் வேலையில் இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 11,600 அதிகரித்திருந்தது. ஒப்புநோக்க, அதற்கு முந்திய ஆண்டில் உயர்வு, 8,800ஆக இருந்தது.

மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வேலையிலிருந்த சிங்கப்பூர்வாசிகளில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் சிங்கப்பூர்க் குடிமக்கள்.

போன ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, வேலை தேடிய ஒவ்வொருவருக்கும் இருந்த வேலைவாய்ப்பு விகிதம் 1.58. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத விகிதமான 1.50த்தைவிட அது அதிகம். ஆனால் அதற்கு முந்திய ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் அது குறைவு. 2024 டிசம்பரில் வேலைவாய்ப்பு விகிதம் 1.64ஆகப் பதிவாகியிருந்தது.

நிரப்பப்படாமல் இருந்த வேலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் 69,600ஆக இருந்தது. அது டிசம்பரில் 77,700க்குக் கூடியது.

நிரப்பப்படாமல் இருந்தவற்றில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு,பொதுவாக உள்ளூர்வாசிகள் சேரும் வேலைகள். நிபுணத்துவச் சேவைகள், நிதிச் சேவைகள், சுகாதார, சமூகச் சேவைகள் முதலியவை அவற்றுள் அடங்கும்.

வேலையில் இருந்த வெளிநாட்டவரின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 43,900 அதிகரித்தது. அதற்கு முந்திய ஆண்டு உயர்வு 35,700ஆகப் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு கூடிய எண்ணிக்கையில் அதிகமானவை, கட்டுமானத் துறையில் வேலை அனுமதிச் சீட்டு பெற்ற ஊழியர்களுக்கானவை.

ஒட்டுமொத்தத்தில் போன ஆண்டு வேலைகளின் எண்ணிக்கை 55,500 அதிகரித்தது. ஒப்புநோக்க அது 2024ல் 44,500ஆக இருந்தது.

கடந்த ஆண்டு வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைவாகவும் நிலையாகவும் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

சென்ற டிசம்பரில், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் அந்த விகிதம் இரண்டு விழுக்காடாக இருந்தது. உள்ளூர்வாசிகளிடையே அது 2.9 விழுக்காடாகவும் குடிமக்களிடையே அது 3 விழுக்காடாகவும் இருந்தது. அந்த விகிதங்கள் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகம்.

இவ்வேளையில், உள்ளூர்வாசிகளைப் பொறுத்தவரை, குறைந்தது 25 வாரம் வேலையில் இல்லாதோர் விகிதம் சென்ற செப்டம்பரிலிருந்து 0.9 விழுக்காடாகவே உள்ளது.

கடந்த ஆண்டு ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்தது. 2024ல் 13,020ஆக இருந்த அது, போன ஆண்டு 14,490க்குக் கூடியது. சென்ற ஆண்டு ஆட்குறைப்புக்கு ஆளானோரில் 73.7 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்.

நிறுவனங்கள் இவ்வாண்டின் (2026) முதல் காலாண்டில் ஆள் எடுப்பதில் தொடர்ந்து கவனத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளம் குறித்த முடிவுகளையும் அவை கவனத்துடன் கையாளும் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்