ஜூரோங் லேக் தோட்டத்தில் உள்ள ஜப்பானியத் தோட்டம் செப்டம்பரில் மீண்டும் திறக்கப்படும்போது, சிங்கப்பூரின் ஆகப்பெரிய அல்லிக் கொடிகளுடனும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் உடனான நடைபாதைகளுடனும் மக்களை வரவேற்கும்.
ஜூரோங் லேக் வட்டாரத்தினுள் அமைந்துள்ள ஜூரோங் லேக் தோட்டங்களின் மறுமேம்பாட்டின் ஆக அண்மைய மைல்கல்லை இது குறிக்கும். லேக்சைட் தோட்டமும் வடக்குப் பகுதியும் முறையே 2019லும் 2023லும் திறக்கப்பட்டன.
வரும் செப்டம்பரில் திறக்கப்படவிருக்கும் ஜப்பானிய, சீனத் தோட்டங்கள், ஜூரோங் லேக் தோட்டங்களுக்குப் புத்துயிரூட்டும் முயற்சியைக் குறிக்கும்.
“லேக்சைட் தோட்டம், எதிர்வரும் சீனத் தோட்டத்துடன் சேர்த்து ஜப்பானியத் தோட்டம், ஜூரோங் லேக் தோட்டங்களில் உள்ள மூன்று தோட்டங்களில் ஒன்றாகும்,” என்று தேசிய பூங்காக் கழகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) தெரிவித்தது.
ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ஜப்பானியத் தோட்ட பாலத்தைக் கடந்து புதிய அல்லிக் கொடித் தோட்டத்திற்குச் செல்லலாம்.
அத்தோட்டம், சிங்கப்பூரின் ஆகப்பெரிய அல்லிக் கொடித் தொகுப்பாக அமையும். அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 150க்கும் அதிகமான அல்லிக் கொடி வகைகளை அங்கு காணலாம்.

