சிங்கப்பூர் சட்டத் தொழிலை நிலையானதாக மாற்ற வேண்டும்: டோங்

சிங்கப்பூர் சட்டத் தொழிலை நிலையானதாக மாற்ற வேண்டும்: டோங்

2 mins read
c94ebe1c-8488-4427-9aee-b41a901a5b1e
கடந்த பத்தாண்டுகளில் சட்டத் தொழிலிலிருந்து விலகுவோரின் எண்ணிக்கை நிலையாக இருந்து வருகிறது என சட்ட அமைச்சர் எட்வின் டோங் ஜூலை 7ஆம் தேதி தெரிவித்தார். - படம்: சேனல் நியூஸ் ஏஷியா
multi-img1 of 2

சிங்கப்பூர், சட்டத் தொழிலை எளிதாக்குவது மட்டுமின்றி, அதை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) கூறினார்.  சட்டத் தொழிலின் நிலைத்தன்மை குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த திரு டோங், சட்டத் தொழிலின் கடினமான தன்மையை ஒப்புக்கொண்ட அதே வேளையில், அதன் ஆழமான நோக்கத்தையும் குறிப்பிட்டார்.

“நெருக்கடியான காலக்கெடு, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பொருளியல் நெருக்கடிகள் போன்ற அழுத்தங்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு மட்டுமே உரியவை அல்ல என்றாலும், மற்றொருவருக்காக வாதாடும் சிறப்புரிமையே இதில் வேறுபடுகிறது,” என்று அவர் எழுத்துபூர்வமான பதிலில் கூறினார்.

வழக்கறிஞர்கள் பலர் இத்தொழிலில் அர்த்தம் காண்பதாலும், அதனுடன் வரும் பொறுப்புகளையும் மன அழுத்தங்களையும் ஏற்கத் தயாராக இருப்பதாலும் இத்தொழிலுக்கு வந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

எனவே, இத்தொழிலை எப்படி எளிதாக்குவது என்பதல்ல கேள்வி. மாறாக, சரியான காரணங்களுக்காக இத்தொழிலுக்கு ஈர்க்கப்பட்டவர்கள் தவறான காரணங்களால் வெளியேற்றப்படாமல், அதை எப்படி நிலைத்திருக்கச் செய்வது என்பதேயாகும்.

நியாயமற்ற பணிச்சுமைகள்

சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஓர் ஆய்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கேள்விகளைச் சமர்ப்பித்திருந்தனர். அந்த ஆய்வில், நச்சுத்தன்மை வாய்ந்த பணியிடச் சூழல்கள், கொடுமைப்படுத்துதல், நியாயமற்ற பணிச்சுமைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் தொழில் போன்றவற்றின் மத்தியில் வழக்கறிஞர்கள் தனியார் தொழிலை விட்டு வெளியேறுவது கண்டறியப்பட்டது.

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அதன் கண்டுபிடிப்புகள், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனால் எழுப்பப்பட்ட வழக்கறிஞர் விலகல் குறித்த நீண்டகாலக் கவலைகளை மேலும் வலுப்படுத்தின. அவர் முன்னதாக, பணிச்சுமை மற்றும் மோசமான பணிச்சூழல் காரணமாக மூன்று புதிய வழக்கறிஞர்களில் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு விலகக்கூடும் என்று கூறியிருந்தார்.

“மொத்தத்தில், இந்த ஆய்வு சில கவலையளிக்கும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொருத்தமான இடங்களில் தீர்க்கமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்,” என்று அமைச்சர் டோங் கூறினார்.

ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் அதன் தாக்கங்களையும் ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக வழக்கறிஞர் சங்கம் ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் வரும் கருத்துகளைக் கையாள்வதற்காக, நீதித்துறை-வழக்கறிஞர் சங்கம் என்ற குழுவும் அமைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வழக்கறிஞர்நீதித்துறைதலைமை நீதிபதி