சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 3.4 விழுக்காடாகக் குறைவு

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி 3.4 விழுக்காடாகக் குறைவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 6:06 pm

2 mins read

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் வெகுவாக மெதுவடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருள்களுக்கான தேவை தொடர்ந்தபோதும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் செப்டம்பர் மாதம் 3.4 விழுக்காடு உயர்ந்ததாகத் திங்கட்கிழமை (அக்டோபர் 26) பொருளியல் மேம்பாட்டு வாரியம் புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 7.1 விழுக்காட்டைவிட அது குறைவு. ஆகஸ்ட் மாதத் தொழிற்சாலை உற்பத்தி 15.4 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

மின்சாதனங்களுக்கான உற்பத்தியின் வளர்ச்சி மிதமானதுடன் மருத்துவப் பொருள்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்ததால் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை மெதுவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிர்மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்துப் பிற துறைகளில் ஒன்பது விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் துல்லியப் பொறியியல் துறையில் ஆகப் பெரிய வளர்ச்சி பதிவானது. இயந்திரங்கள், கட்டமைப்புப் பிரிவு ஆகியவற்றுக்கான பகுதி மின்கடத்திக் கருவிகளின் உற்பத்தி 34.8 விழுக்காடு அதிகரித்ததை அடுத்து துல்லியப் பொறியியல் துறை 31 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

தொழில்துறை ரப்பர் பொருள்கள், துல்லிய உலோகப் பொருள்கள், அச்சுகள், கருவிகள், சாதனங்கள் ஆகியவற்றின் அதிக உற்பத்தி காரணமாகத் துல்லியத் தொகுதிகள், கூறுகள் பிரிவும் 12.4 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான வலுவான தேவை காரணமாக மின்னணுவியல் துறைப் பிரிவு 5.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் அந்த வளர்ச்சியானது ஆகஸ்ட் மாதத்தின் 28.3 விழுக்காடு வளர்ச்சியை விடக் குறைவு.

தகவல் தொடர்பு, பயனீட்டாளர் மின்னணுவியல் பிரிவு, கணினி சாதனங்கள், தரவு சேமிப்புப் பிரிவு ஆகியவை முறையே 29 விழுக்காடும் 21.3 விழுக்காடும் என மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டன.

அதேவேளை, பகுதிமின்கடத்திகளின் உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தின் 25.9 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது 1.9 விழுக்காடாகக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்