சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுக்கும் மலேசியாவின் சிறப்புப் பிரிவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் துடிப்பான, முக்கியமான பங்கு வகித்த மூத்த மலேசியக் காவல்துறை அதிகாரிக்கு சிங்கப்பூரின் மெச்சத்தகு சேவை விருது வழங்கப்பட்டுள்ளது.
மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ஹாஜி முகமது காலிட் இஸ்மாயிலுக்கு சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான க. சண்முகம் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் உள்துறை அமைச்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சியில் திரு காலிட்டுக்கு விருது வழங்கப்பட்டது.
திரு காலிட் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவ்வாண்டு ஜூன் 23ஆம் தேதி அவர் தலைமை ஆய்வாளர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இயக்குநராக இருந்த சமயத்தில் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கும் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நிபுணத்துவ பந்தத்தையும் வலுப்படுத்த திரு காலிட் முக்கிய அங்கம் வகித்தார்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் வட்டாரப் பாதுகாப்புக்கும் பங்களித்ததற்காக மெச்சத்தகு சேவை விருது திரு காலிட்டுக்கு வழங்கப்பட்டது.
திரு காலிட்டின் தலைமைத்துவத்தின்கீழ் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவும் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டதோடு இருதரப்புப் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் விரிவான ஒத்துழைப்பைச் செயல்படுத்தின.
“இருதரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் ஐஎஸ்ஐஎஸ் குழு போன்ற இதர பயங்கரவாதக் குழுக்கள் தொடர்பிலான முயற்சிகளை முறியடிக்க முடிந்தது,” என்று சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
திரு காலிட்டின் பங்களிப்பைப் பாராட்டி திரு சண்முகம் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றைப் பதிவேற்றினார்.
“மலேசியக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுகளில் உள்ள பல தலைமுறைகளின் முயற்சியாலும் கடின உழைப்பாலும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வட்டாரங்கள் பாதுகாப்பாக உள்ளன,” என்றார் திரு சண்முகம்.