எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்குப் புதிய வெற்றியாளர் கிடைத்துள்ளார்.
பயிற்சி, தகுதிச் சுற்றுகள் அனைத்திலும் முன்னிலை வகித்த மேக்லேரனின் லேண்டோ நோரிஸ், தன் முதலிடத்தை எந்நிலையிலும் நழுவவிடாமல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) போட்டியின் வெற்றியாளராக மகுடம் சூடினார்.
இதுதான் நோரிஸ்ஸுக்குக் கிடைத்துள்ள மூன்றாம் எஃப்1 முதலிட வெற்றி.
ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இரண்டாம் நிலையில் வந்த ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டேப்பனுக்கும் அவருக்கும் 20 வினாடிகளுக்கும் மேலான இடைவெளி இருந்தது.
இந்த வெற்றியால் 2024 ஓட்டுநர்ப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் வெர்ஸ்டேப்பனுக்கும் நோரிஸ்ஸுக்கும் இடையேயான இடைவெளி 52 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
அவரது வெற்றியைக் கொண்டாட மரினா பேயில் வாணவேடிக்கைகள் வெடித்தன.
மூன்றாம் நிலையைப் பிடித்தார் மேக்லேரனின் ஆஸ்கார் பியாஸ்ட்ரி. இதனால் 2024 கார் உற்பத்தியாளர்ப் போட்டிகளில் முன்னிலை வகிக்கும் மேக்லேரனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
சென்ற ஆண்டு சுவரில் மோதிய மெர்சிடிசின் ஜார்ஜ் ரசல், இவ்வாண்டு நான்காம் நிலையைப் பிடித்தார். ஐந்தாம் நிலையை ஃபெராரியின் சார்ல் லெக்லேர் பிடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நடைபெற்ற எஃப்1 இரவு நேர கார் பந்தயம், ரசிகர்களை ஈர்ப்பதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இவ்வாண்டு அது 269,000க்கும் மேற்பட்ட உள்ளூர், உலக ரசிகர்களை ஈர்த்திருந்தது.
சில நாள்களுக்கு முன்பு சுமத்ரா சூறாவளியால் சிங்கப்பூரில் கடும் மழை பெய்து மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆனால் கார்ப் பந்தய ரசிகர்களின் ஆர்வமோ உற்சாகமோ குறையவில்லை.
செப்டம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்ற ஃபார்முலா ஒன்னின் முக்கிய சின்னமாக விளங்கும் சிங்கப்பூரின் இரவு நேரப் போட்டியைக் காண மரினா பே தடங்களை நோக்கி ஏராளமானோர் படையெடுத்தனர்.
இவ்வாண்டு மூன்று நாள் வாரயிறுதி போட்டியின் அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்கப்பட்டன. கடந்த 2023ஆம் ஆண்டில் வந்திருந்த 264,108 ரசிகர்களைவிட இம்முறை எண்ணிக்கை சற்றுக் கூடியிருந்தது.
என்எஸ் சதுக்கம் கட்டுவதற்காக மரினா பே மிதக்கும் மேடை பகுதியைத் தவிர்க்கும் வகையில் பாதை மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டில் சாதனை அளவாக எஃப்1 போட்டியைக் காண 302,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

