மூன்றாம் காலாண்டில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 45.8% வளர்ச்சி

மூன்றாம் காலாண்டில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 45.8% வளர்ச்சி

படம்: சாவ்பாவ்

24 Nov 2026 - 4:55 pm

2 mins read

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 45.8 விழுக்காடு என்ற சாதனை வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

மின்னணுவியல் துறையில் காணப்பட்ட எதிர்பாராத வளர்ச்சியே இதற்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்து மின்னணுவியல், தனித்திறன் இயந்திரங்களில் வளர்ச்சியே அதற்கு முக்கியக் காரணம். அத்துடன், கப்பல், படகுக் கட்டமைப்புகள் தொடர்பிலும் ஏற்றுமதி குவிந்தது அதற்கு வலுசேர்த்தது என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 24) தெரிவித்தது.

மூன்றாம் காலாண்டில் மின்னணுப் பொருள்கள் சார்ந்த ஏற்றுமதி 117 விழுக்காடு அதிகரித்ததாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இரண்டாம் காலாண்டில் பதிவான 88.1 விழுக்காட்டு வளர்ச்சியின் தொடர்ச்சியாகும்.

இதில் கணினிச் சில்லுகள், வட்டு ஊடகத் தயாரிப்புகள், தனிநபர் கணினிகள் ஆகியவை அதிக பங்களிப்பை வழங்கியுள்ளன. அவற்றின் ஏற்றுமதி முறையே 83.2 விழுக்காடு, 313.7 விழுக்காடு, 166.3 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்துள்ளது.

மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி, இரண்டாம் காலாண்டில் பதிவான 8 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து அதிகரித்து, 20.8 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

கப்பல், படகுக் கட்டமைப்புகள், தனித்திறன் இயந்திரங்கள், பணவியல் அல்லாத தங்கம் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில், தனித்திறன் இயந்திரங்களின் ஏற்றுமதி 40.2 விழுக்காடும், பணம் சாராத் தங்கத்தின் ஏற்றுமதி 70.1 விழுக்காடும் அதிகரித்துள்ளன.

கப்பல், படகுக் கட்டமைப்புகளுக்கான வளர்ச்சி விழுக்காட்டை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் மிகக் குறைந்த அளவு ஏற்றுமதி பதிவானதே தற்போதைய இந்த மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்திற்குக் காரணம் என்றும் அது சுட்டியுள்ளது.

சிங்கப்பூரின் முதல் 10 சந்தைகளுக்கான அதன் ஒட்டுமொத்த எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, அமெரிக்கா, சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணம்.

இதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அந்நாட்டிற்கான ஏற்றுமதி 74.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. தைவானைப் பொறுத்தவரை, 58.5 விழுக்காட்டு வளர்ச்சியும், சீனாவிற்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதியில் 46.6 விழுக்காட்டு வளர்ச்சியும் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்