அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் புதிய வீடுகள் பல கட்டப்படுவதாலும் மேம்பாட்டுப் பணிகள் இடம்பெற இருப்பதாலும் சிங்கப்பூரின் வடக்கு வட்டாரம் உருமாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான பெருந்திட்ட வரைவு அறிக்கை வடக்குப் பகுதியில் வரவிருக்கும் மாற்றங்களை விளக்கியது.
வடக்கு வட்டாரத்தின் வடிவத்தையே மாற்றி அமைக்கும் அளவுக்குப் பெரிய மாற்றங்கள் அவை.
அதன்படி, செம்பவாங் கப்பல் பட்டறை மறுமேம்பாடு காணும். வடக்கில் அமைந்துள்ள ஆகப்பெரிய பொருளியல் மையமான உட்லண்ட்ஸ் வட்டார நிலையம் விரிவடையும். அத்துடன், முன்னைய சிங்கப்பூர்க் குதிரைப் பந்தயத் திடல் வீடுகளை வரவேற்கத் தயாராகி வருகிறது.
மேலும், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் முக்கிய அம்சமான ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் கட்டமைப்பு வடக்கு வட்டார வர்த்தகங்களுக்கும் சொத்து உரிமையாளர்களுக்கும் பலனளிக்க உள்ளது.
இவற்றுடன், செஞ்சாரு, உட்லண்ட்ஸ், கிராஞ்சி, லென்டோர் ஆகிய பகுதிகளில் பொது மற்றும் தனியார் வீடுகள் பல கட்டப்பட உள்ளன.
குறிப்பாக, செம்பவாங் நார்த் மற்றும் உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் பகுதிகளில் மட்டும் அடுத்த பத்தாண்டுகளில் 14,000 புதிய வீடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல லென்டோரில் கூட்டுரிமை வீடுகள் அடுத்தடுத்துக் கட்டப்பட உள்ளன. புதிய கடைத்தொகுதி ஒன்றும் அங்கு வரவுள்ளது. அந்த வட்டாரக் குடியிருப்புப் பேட்டையின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் துணைபுரியும் வகையில் இதுபோன்ற வசதிகள் அங்கு அமைகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த உருமாற்றங்களின் ஒரு பகுதியாக விரிவான சேவைகளும் பொழுதுபோக்கு வசதிகளும் வடக்கு வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன் மேலும் துடிப்பான சமூகத்தை அந்த வட்டாரத்தில் காணமுடியும்.
தனியார் வீடுகளைக் கணக்கிட்டால், வடக்கு வட்டாரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே அவை உள்ளன.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2025 இரண்டாம் காலாண்டு நிலவரப்படி அங்கு 24,063 தனியார் வீடுகளே உள்ளன. அது, மேற்கு வட்டாரத்தில் உள்ள 59,588 வீடுகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி அளவு.
மேலும், ஆகப் பெரிய மத்திய வட்டாரத்தில் உள்ள 215,108 தனியார் வீடுகளைக் காட்டிலும் அது மிகவும் குறைவு.
எனவே, தனியார் வீடுகளை அவ்வட்டாரத்தில் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வட்டாரமான செம்பவாங் நார்த்தில் மட்டும் ஏறத்தாழ 2,000 தனியார் வீடுகள் கட்டப்பட உள்ளன.