எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் திட்டம்

எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2026 - 5:42 pm

2 mins read

எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடு, நாடுகளிடையே அதிகரித்து வரும் வள தேசியவாதம் ஆகியவை காரணமாக உலகளாவிய எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள சவாலான சூழலை எதிர்கொள்ளச் சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறது என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சரான டான் சீ லெங் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 26) தெரிவித்தார்.

மெரினா பே சேண்ட்ஸில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார மாநாட்டின் தொடக்கவிழாவில் பேசிய அவர், இந்த எதிர்நீச்சல் போடும் சூழலை வெற்றிகரமாகச் சமாளிக்க, சிங்கப்பூர் தனது எரிசக்திப் பயன்பாட்டு வழிகளைப் பன்முகப்படுத்தி வருவதாகவும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

எரிசக்திப் பாதுகாப்பைக் குறுகிய காலத்தில் உறுதி செய்யப் புதிய படிம எரிபொருள் உடன்பாடுகளை ஏற்படுத்தினாலும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் புவிச்சூழலுக்கு உகந்த சூரிய சக்தி போன்ற குறைந்த கரிம வெளியேற்ற வழிமுறைகளை நாடு துரிதப்படுத்தும் என்றார் அமைச்சர் டான். மேலும், வணிக ரீதியாக இன்னும் பயன்பாட்டுக்கு வராத அணுசக்தி, புவிவெப்ப சக்தி உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளையும் சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எரிசக்தித் துறையின் இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அமைச்சின் பெயர் அக்டோபர் 1 முதல் வர்த்தக, தொழில்துறை அமைச்சு என்பதிலிருந்து ‘எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டான், நாட்டின் ஒட்டுமொத்த மின்கட்டமைப்பின் மீள்திறன் தொடர்ந்து நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்றும் செலவினங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில் பொருளியல் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் குறைந்த கரிம உத்திகளைப் பின்பற்றவும் நட்பு நாடுகளுடனான தொடர்பை ஆழப்படுத்தவும் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை இந்தோனீசியா குறைத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு அமைச்சரின் இந்த உரை வெளியாகியுள்ளது. இந்த விநியோகக் குறைப்பு சிங்கப்பூரின் ஒட்டுமொத்த அன்றாட எரிவாயுத் தேவையில் 2 விழுக்காட்டுக்கும் குறைவானதே என்று சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் பின்னர் தெளிவுபடுத்தியது. தற்போது சிங்கப்பூர் தனது தேவைகளில் ஏறத்தாழ 95 விழுக்காட்டுக்கு இயற்கை எரிவாயுவையே நம்பியுள்ளது.

முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையிலான வள தேசியவாதப் போக்கு மிகுந்த கவலையளிக்கிறது என்று அமைச்சர் டான் சுட்டிக்காட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் வர்த்தக அபாயங்களை அதிகரிப்பதோடு, எரிசக்தித் துறையிலான முதலீடுகளையும் பின்வாங்கச் செய்து, சிங்கப்பூர் போன்ற எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்கு நீண்டகால அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்